Thursday, January 30, 2014

காந்தி இன்றைய பிம்பம்.....!


  மணி எட்டு. படுக்கையில் வார இதழ் படித்தப்படி படுத்திருக்கின்றேன். இந்த இரவை கழிக்க வேண்டியவனாய் படுக்கையில் புரண்ட படி வார இதழில் கவனம் கொள்கின்றேன். விடிந்தால் காந்தி இறந்த தினம். இருந்தாலும் நாளை தை அம்மாவாசை. அருகில் மகள் எஸ்.ரா தமிழில் மொழிப்பெயர்த்துள்ள வம்சி பதிப்பின் ஆலிஸின் அற்புத உலகம் படித்து கொண்டிருக்கிறாள். செல்போனில் அம்மா அழைத்தார் ,தம்பி நாளை காலையில் கோயிலுக்கு போகணும். விரதம் இருக்கணும். மதியம் விரதம் விடணும். அம்மா வீட்டுக்கு சாப்பிட வந்து விடு என கட்டளைகள் தொடர்கின்றது. அனைத்திற்கும் சரி என தலையாட்டி வைத்தாயிற்று. என் மகள் கேட்கிறாள்,” ஏம்பா , அப்பத்தா எப்பா பார்த்தாலும் விரதம் இருன்னு சொல்றாங்க! விரதம்ன்னா என்னப்பா!”

இதற்கு முன் அன்னஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது விரதம் சம்பந்தமாக கேள்வி எழுப்பியது உண்டு. டிவியில் செய்தியில் சின்னகுழந்தை ஜூஸ் கொடுப்பதை பார்த்து , ஏம்பா ஜூஸ் குடிச்சு தான் விரதத்தை முடிக்கணுமா? என்று கேட்டவள். அப்போது அவள் உண்ணா விரதம் என்று சேர்ந்து இருந்ததால், சாப்பிடாமல் பட்டினி இருப்பது என்பதை உணர்ந்து வேறு எந்த கேள்வியும் எழுப்பவில்லை. காந்தி பற்றிய அடையாளம் ரூபாய் நோட்டிலும், புத்தகத்தில் , காந்தி கண்காட்சியகத்தில் மேலாடை அற்ற, தொப்பி அற்றவராக காட்சியளித்ததால் காந்தி போலன்னு சொல்றாங்க என ஹசாரேவை பார்த்து மோலோட்டமான கேள்வியை மட்டும் முன் வைத்து என்னை நழுவ விட்டுவிட்டாள். நான் பல கேள்விகளுக்கு பதில்களை அவளின் அம்மாவையே கேட்டு தெரிந்து கொள்ள சொல்வேன்.

அம்மாக்கள் எப்போதும் குழந்தைகளை எளிதாக சமாளிக்கும் திறன் பெற்றவர்கள். அப்பண்பு இயற்கையாகவே அமைந்து விடுகிறது. இதன் ரகசியம் தெரிந்து தான் துவக்கப்பள்ளியில் ஆண் ஆசிரியர்களை விட அதிகம் பெண் ஆசிரியர்களுக்கு அரசு முக்கியத்துவம் தருகின்றது. பெண் ஆசிரியர்களுக்கு அற்பணிப்பு பண்பு உண்டு. சிலர் எதிலும் விதிவிலக்கானவர்கள். அவர்களை பற்றி நான் எப்போதும் பேசுவது இல்லை. ஆண் ஆசிரியர்கள் குறித்து ஒரு செய்தி.

சமீபத்திய ஜ.நா அறிக்கை மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதற்கு , ஆசிரியர்கள் வகுப்புக்கு முறையாக வராததும் காரணம் என்கிறது. ஆசிரியர்கள் பள்ளி அல்லது வகுப்புக்கு வராமல் தவிர்க்கும் வீதம் 10 சதவீதம் அதிகரித்தால், அது 1.8 சதவீதம் மாணவர்கள் வருகையை குறைக்கிறது எனவும் புள்ளிவிபரத்தை தருகிறது. பள்ளிகளில் ஆண் ஆசிரியர்களே தொடக்கப் பள்ளி அளவில் அலுவலக உதவியாளர்கள் இல்லாத காரணத்தால், அனைத்து வேலைகளையும் பார்க்க நேரிடிகிறது என்பதையும் அரசு நினைவில் வைத்துக் கொண்டால் இந்த குறையை தவிர்க்கலாம். சமீபத்தில் ஆன் லைனில் பள்ளி மாணவர் விபரம் சேர்க்கையில் ஆண் ஆசிரியர்களே இரவு பகல் பாராமல் இணையத்தில் மாணவர்களின் புள்ளி விபரங்களை பதிவேற்றினார்கள் என்பதை அனைத்து ஆசிரியர் உலகமும் அறியும். வகுப்புகளில் ஆசிரியர்கள் வருகை முறைப்படுத்த வாயளவில் பிற பணிகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்தக்கூடாது என்று சொன்னாலும் அலுவலக உதவியாளரை நியமிக்காத வரை ஆண் ஆசிரியர்கள் வகுப்புக்கு செல்லாமல் அலுவலக பணிகளை செய்ய நேரிடும் என்பதும் நிதர்சன உண்மை.

விரதம் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது காந்தி தான். நாளை தியாகிகள் தினம் என்று என் மகளிடம் சொன்னேன். அவள் சுதந்திரத்துக்கு போராடினவர்கள் நினைவாக கொண்டாடப்படுகிறதா ? என்றாள். காந்தி இறந்த தினம். கோட்சே தானேப்பா காந்தியை சுட்டார். அவர் ஏன்னப்பா சுட்டார்? காந்தி அமைதியானவர் தானே அப்பா? அவர்கிட்ட வேட்டியை தவிர எதுவும் இல்லையே அப்பா அப்புறம் எதை புடுங்க காந்தியை சுட்டார் என பரிதாபமாக கேட்டாள். அவளை உறங்க வைப்பதற்கான கதை கரு கிடைத்த மகிழ்ச்சியில் சொல்ல துவங்கினேன். இந்து முஸ்லீம் பிரிவினை கல்கத்தா கலாட்டா என உரையாற்ற தொடங்கினேன். வாத்தியார் வேலையை இங்கேயும் விடமாட்டீயாப்பா.. சுருக்கமா சொல்லுப்பா... இல்லை புத்தகம் இருந்தா கொடு நான் படிச்சுக்கிறேன். அதான் நான் எதையும் அம்மாவிடம் கேட்டு தெரிந்து கொள்வேன். நீ எப்பவுமே வள வளா கொள கொளா என்றாள்.

விரதம் பத்தி கேட்டா இவரு காந்தி அது இதுன்னு அறுக்கிறார் அம்மா? என்றாள். என் மனைவி , விரதமா மது...! அது வேற ஒண்ணுமில்லை காலையில வழக்கம் போல இட்லி சாப்பிட்டு...(பலகாரம்) காபி டீ குடிச்சுட்டு....அதுக்கு பின்னாடி நொருக்கு தீணி சாப்பிடாம . நேரடியா மதியம் புல் மீல்ஸ் அவுங்க அப்பா புண்ணியத்தில் வடை பாயசத்துடன் சாப்பிடுறது என்றாள். நல்ல விளக்கம்.
ஈரான் மீது பொருளாதர தடையை நாடாளுமன்றம் கொண்டு வந்தா தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்வேன் என்று சொல்ல நான் என்ன அமெரிக்க அதிபர் ஓபாமாவா...! என் மனைவியின் விரதம் சார்பான விளக்கத்திற்கு தடை விதிக்க. அதை அப்படியே ஏற்று கொள்ள அமெரிக்க பாரளுமன்றம் அல்ல என் மகளும். !

ஜெயமோகன் எழுதிய காந்தி பற்றிய புத்தகத்தை தேடி, இரவை காந்தியின் நினைவுடன் கழிக்க முற்படுகின்றேன். இதோ அதை பற்றி எழுத தொடங்கி விட்டேன். காந்தி நினைவு தினத்தில் உலக தொழு நோய் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுவதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இந்த நோய் பாதிப்பு இந்தியாவில் அதிகம். இந்த நோயை உருவாக்கும் கிருமியை நார்வே டாக்டர் ஹெர்கார்ட் ஆர்மோர் கான்ஸன் 1873ல் கண்டு பிடித்தார். அதன் பிறகு தான் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதனை குறித்து விரிவாக இன்னொரு தருணத்தில் பார்க்கலாம்.

பித்ருகடனைத் தீர்க்க தை அம்மாவாசை விரதம் இருக்க வேண்டும். கோயிலில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கவலை ஆட்கொள்கின்றது. அப்பா எனக்காக செய்த தியாகங்கள் என் கண் முன் விரிய , என் தந்தையை கோட்சே போல பலமுறை சுட்டு வீழ்த்தியது காட்சிக்கு வர அப்படியே உறங்கிப்போனேன்.
 

Wednesday, January 15, 2014

இந்தமாதிரி காதல் உங்களுக்கும் இருக்கலாம்...!

   காலை 5 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து, 6 மணிக்கு வெள்ளை சாட்டை, வெள்ளை பேண்ட் அணிந்து , சூ பாலிஷ் போட்டு, கிளம்ப எத்தனிக்கையில், ”டேய் வாசல் தெளிக்கவில்லை, கொஞ்சம் நில்லுடா” என்று அம்மாவின் குரல் கேட்கும். வேகமாக பறபறக்க தண்ணிர் தெளித்து, சிறியதாய் கோலம் போட்டு , பார்த்து போயிட்டு வா என்று வழியனுப்ப, சைக்கிள் பெல்லை பக்கத்து வீட்டு வசந்திக்கு கேட்கும் விதத்தில் அழுத்தி, ஓசை எழுப்பி, அவள் பல் இளிக்க , பைக்கை உதைப்பதை போல, சைக்கிள் பெடலை உதைத்து , சைக்கிளில் செல்லும் போது , கனவும் சேர்ந்தே வரும்.

    பாகிஸ்தான் பார்டர், சுற்றிலும் கடல், மிதந்து செல்லும் இந்திய கப்பலில் வெள்ளை சீருடை அணிந்து , பைனாகுலரில் ரோந்து பார்க்கையில், சீறிவரும் விசைப்படகை கை தூப்பாக்கியில் சுடவும் மற்றோரு கையில் கை எறி குண்டு எறிந்து வெடிக்க செய்து, இந்திய இராணுவ கப்பலில் இருந்து குதித்து, கடலில் நீந்தி சென்று பாகிஸ்தான் பார்டரில் நிற்கும் எதிரி கப்பலை அடைந்து, பதுங்கி பதுங்கி , கப்பலில் ஏறி, அனைவரையும் சுட்டு வீழ்த்தி, கடைசியில் கப்பலை சிறைப்பிடித்து, தகவல் கொடுக்க அனைவரும் பாராட்டினர். வீரபதக்கத்துடன் ,ஜனபாதிபதி அருகில் நிற்கும் புகைப்படம், இ அத்துடன் செய்திய மறுநாள் செய்திதாளில் அனைவரும் படிக்கும் கனவுடன் ,அமெரிக்கன் கல்லூரியில் நுழைகையில் பரேட் ஆரம்பித்து இருந்தது.

    ப்ரேட் சீதே சல், பாயே மூட், பீச்சே மூட், சவுதான் என்ற கட்டளைகளுக்கு அடிபணிந்து வியர்க்க வியர்க்க லைப்ட் ரைட் , லைப்ட் ரைட் போட்டு நடந்து, இந்திய இராணுவம் பற்றியும் , கப்பல் படை குறித்த செய்திகள், அதில் இடம்பெற்றுள்ள வீரர்கள் நிலை குறித்தும் தெரிந்து, அவர்கள் கொடுக்கும் பூரியை சாப்பிடும் போது, பசிக்கு அமிர்தம் போல இருக்கும்.

    கல்லூரியில் , இந்திய இராணுவத்தில் கேப்டனாக வருவேன் என்ற நண்பனை பார்க்கையில் பெருமையாக இருக்கும். பிசிக்ஸ் படிச்சா உடனே கப்பல் படையில் சேர்த்து கொள்வார்கள் என்ற நண்பனிடம், சுவாலஜி படித்தால் சேரமுடியாத என அப்பாவி தனமாக கேட்டு , எம். எஸ் சி  மெரைன் பயாலஜி படி , கண்டிப்பாக கப்பல் படையில் சேரலாம் என்ற டிப்ஸ் பெற்று மனம் திருப்தி கொள்ளும். தேசிய உணர்வு மிகுந்து இருக்கும் அந்த கணங்களில் , காந்தி அம்பேத்கார் பற்றிய உறவு விவாதங்கள் நிறைந்து இருக்கும்.

    உலகில் இந்திய  இராணுவம் 4வது பெரியது. சுமார் 20 லட்சம் வீரர்கள் இருக்கிறார்கள். இந்திய ராணுவம் தரைப்படை, கப்பல் படை, விமானப்படை, கடலோர காவல் படை,ய  துணை ராணுவப் படை என ஐந்து படைப்பிரிவுகள் உள்ளன.
     
     கல்லூரி முடிந்து 1999 ல் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் ,இந்திய இராணுவம் வெற்றி பெற்றது. செய்தி தாளில் செய்தி படிக்கும் போது நம்முடன் பயின்ற நண்பர்கள் பெயர்  இருக்க்கிறதா என்று பார்ப்பேன். எனக்கு விவரம் தெரிந்து என்னையும் சேர்த்து யாரும் இராணுவத்தில் சேர்ந்ததாக விவரம் இல்லை. இருப்பினும் செய்திதாள்களில் நம் வீரர்கள் பாகிஸ்தான், சீனர்களின் எல்லை அத்துமீறல்களை தடுக்கும் வீரர்களை  நினைக்கும் போது, என் நானே இராணுவ வீரனான உணர்வு ஏற்படும்.

   என்னுடைய என்.சி.சியின்  பி, மற்றும் சி சர்டிபிகேட்டுகளை எடுத்து பார்க்கின்றேன். அவை என் கனவுகளை போல நொருங்கி விழுகின்றன. இருந்தாலும் அவை என்னுடைய கனவை தாங்கி இன்னும் சான்றிதழாகவே அடையாளம் காணப்படுகின்றது. என்னைப்போன்று எத்தனைப்பேரின் கனவுகளை தாங்கி வீட்டில் பி, மற்றும் சி சர்டிபிகேட்டுகள் உறங்கி கிடக்கின்றனவோ..! நம் வீரர்களை நினைத்து பெறுமை கொள்கின்றேன்.

   இந்திய இராணுவத்தில் இடம் பெறும் கனவுகளுடன் அந்த நாள் முழுவதும் நண்பர்களுடன் பேசி களைத்து போய் வீடுதிரும்புகையில், நான் அணிந்து இருக்கும் சீருடையை கண்டு, வீட்டுக்கு அருகில் இருக்கும் பெரியவர்கள் சுபாஷ் சந்திர போஸ் இராணுவத்தில் சேர பர்மாவிற்கு சென்ற நண்பர்கள், உறவினர்கள் கதைகள், மதுரைக்கு காந்தி வந்த கதை, ஆடை துறந்த கதை என சொல்லி , நம் மனதில் தேச பற்றை விதைத்து , நம்மை இராணுவ வீரனாகவே மெருகேற்றி விடுவார்கள்.

1948 ஜனவரி 15 ல் ராணுவ தளபதி கரியப்பா பெறுப்பேற்ற , இந்த நாள் ஜனவரி 15, இந்த வரலாற்று நினைவை கவுரவிக்கும் பொருட்டும் , நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்காலுக்குமரியாதை செலுத்தும் விதமாகவும் இந்திய இராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது. நாம்மிடம் இரானுவத்தில் சேர வேண்டும் என்ற உணர்வு நிரம்பி இருந்தாலும் , நாம் சேர இயலாமைக்கு ஆயிரமாயிரம் காரணம் இருந்தாலும், நாம் பாதுகாப்பாக இருக்க காரணமான இராணுவ வீரர்களை இந்நாளில் நினைத்து போற்றுவோம். நம் இளைய சமூகம் ராணுவத்தில் சேர ஊக்குவிப்போம்.

   என்னுடைய சி, மற்றும் பி சர்டிபிகேட்டுகளுடன் பாரா கிளைம் பேட்ஜ் , மற்றும் பல கேம்புகள் சென்ற சர்டிபிகேட், குடியரசு தின அணிவகுப்பு தேர்வில் பங்கு கொண்ட நினைவுகளுடன் இந்த நாள் முழுவதும் ராணுவ கனவுகளுடன் கடக்கின்றேன்.


ஜெய் ஹிந்த்.

Sunday, January 12, 2014

இளைஞர்களுக்கு மட்டும் கொஞ்சம் ஸ்பெசலா...!

     பிரிட்டானிகா கலைக்களஞ்சியத்தை ஒரே நாளில் படித்து, எந்த கேள்வி கேட்டாலும், பதில் சொல்லி அசத்திய அரிய மனிதன், வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்த நாள் ஜனவரி 12ம் நாள் வருகிறது. ஜனவரி 12 தேசிய இளைஞர் தினமாக, 1984ல் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டு , 1985 முதல் ஒவ்வொரு வருடமும் தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

   விவேகானந்தர் ஆற்றிய உரைகள், எழுதிய எழுத்துக்கள் , அவரது வாழ்க்கை என அனைத்தும் இளைஞர்களுக்கான முன் உதாரணமாகவும் தூண்டுகோலாகவும் இருக்கின்றது.
  
   ஒரு நாள் குரங்கு கூட்டம் துரத்தி வரும் போது, எல்லோரும் பயந்து ஓடினார்கள். ஆனால் நரேந்திரன் மட்டும் ஓடாமல் திரும்பி நின்று குரங்குகளை எதிர்த்தார். எல்லா குரங்குகளும் பின் வாங்கி ஓடின. அன்று முதல் தன்னை நம்ப வேண்டும் என உணர்தார். கடைசிவரை தன்னை நம்பினார். இளைஞர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார்.
 ” முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளேயே உள்ளன. அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து. 'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் விஷத்தை பொருட்படுத்தாதிருந்தால், பாம்பின் விஷமும் உன் முன் சக்தியற்றதே.” என்கின்றார்.
   
     1863 ஜனவரி 12 ல் விஸ்வநாத் தத்தா , புவனேஸ்வரி தேவி தம்பதியினருக்கு மகனாக பிறந்த நரேந்திரநாத் தத்தா என்ற விவேகானந்தன் குழந்தை பருவத்தில் மிகவும் சேட்டை செய்பவனாகவும் ,அதே நேரத்தில் உதவிகள் செய்பவனாகவும் வளர்ந்தான். யாராவது உதவி என்று வந்தால் வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருளையும் கொடுத்து விடுபவனாக இருந்தான்.
   
    ஒருமுறை நான்கு துறவிகள் நரேந்திரன் இடத்தில் உதவி கேட்க, அவர்களுக்கு வேண்டியதை எடுத்துவர வீட்டிற்கு சென்றான். ஆனால், அவன் அம்மா அதை பார்த்துவிட, அவனை அறையில் அடைத்து வைத்தார். ஆனால் , அறையின் ஜன்னல் வழியாக அந்த அறையில் இருந்த சில ஆடைகளை துறவிகளுக்கு தூக்கி வீசினார். மூன்று பேருக்குதான் உதவ முடிந்தது. வேறு எதுவும் கிடைக்க வில்லை. நான்காவது துறவிக்கு உதவுவதற்காக தான் அணிந்திருந்த ஆடைகளை அவிழ்த்து கொடுத்து விட்டான்.
     
    அதன் தொடர்ச்சி தான் வளர்ந்த பின் அவர் உருவாக்கிய  “ராமகிருஷ்ண மடம்” என்ற அமைப்பாக இருக்கிறது. உதவி வேண்டுபவர்களுக்கு உங்கள் கரங்களை நீட்டி உதவுங்கள். அப்படி முடியா விட்டால் , உதவுபவர்களை ஆசிர்வதித்து அனுப்புங்கள் என்றார்.
படிக்கும் போது மிகவும் அமைதியாக அம்மா சொல்லும் அனைத்து கதைகளுக்கும் உம் கொட்டி கவனிப்பான். இராமாயணம், மகாபாரதம் கதைகளை மிகவும் கவனமாக கேட்பான். அதனால் தான் விவேகானந்தரான பின் கல்வி பற்றி இப்படி கூறுகிறார்,
“வாழ்நாள் முழுவதும் உங்களால் ஜீரணிக்க முடியாமல் உள்ளிருந்து தொந்தரவு தரக்கூடிய செய்திகளை மூளைக்குள் திணிப்பது அல்ல கல்வி. வாழ்க்கையை வளப்படுத்துகின்ற , மனிதனை உருவாக்குகின்ற, குணத்தை மேம்படுத்துகின்ற, கருத்துக்களை ஜீரணம் செய்யத்தக்க கல்வியே நாம் வேண்டுவது.” 
   
     தவறாக ஒரு மாணவனை அடித்த ஆசிரியரை பார்த்து கேலி செய்து சிரித்ததற்காக  அடி வாங்கியவன் நரேந்திரன் , காதில் இரத்தம் வடியவே, அழுகையுடன், ’இனி மேல் காதை திருகி அடித்தால் சும்மா விடமாட்டேன். இனி என்னருகில் வரக்கூடாது’ என்று ஆசிரியரிடம் கூச்சலிட்டான். தலைமையாசிரியர் அப்போது வரவே நடந்ததை எடுத்து கூறி, இனி நான் இப்பள்ளியில் படிக்க போவதில்லை என்று கூற, சமாதானத்திற்கு பின் படிப்பை தொடர்ந்தான்.
   
     தவற்றை தட்டி கேட்கும் மனப்பான்மை விவேகானந்தரிடம் இளமையிலே இருந்தது. 
    
    ”நமது சொந்த மனப்பான்மை தான் நமக்கு ஏற்றாற்போல் உலகத்தைத் தோன்றும்படி செய்கிறது. நமது எண்ணங்களே பொருள்களை அழகுபொருந்தியவை ஆக்குகின்றன. நமது எண்ணங்களே பொருள்களை அழகு பொருந்தியவை ஆக்குகின்றன. நமது எண்ணங்களே பொருள்களை அவலட்சணமாக்குகின்றன. இந்த உலகம் முழுவதும் நமது சொந்த மனதிலேயே அடங்கியிருக்கிறது. எல்லாவற்றையும் சரியான முறையில் புரிந்து கொள்ளக் கற்றுக்கொள்”  என்று கூறும் விவேகானந்தரின் மனப்பான்மையை நாம் புரிந்து கொண்டால், இந்த உலகம் அழகாக தெரியும்.

     கல்கத்தாவிற்கு வந்த போர்கப்பலை சுற்றிப்பார்க்க , துரையின் அனுமதி வேண்டி அவரின் வீட்டிற்கு சென்ற போது , அவனை வீரர்கள் விரட்டி விட, கட்டிடத்தின் பின் பக்கம் வழியாக ஏறி சென்று , துரையிடம் அனுமதி பெற்று போர்கப்பலை சுற்றி பார்த்தார்.
தான் எண்ணியதை செய்து முடியும் மன உறுதி பெற்றிருந்தார்.
மரத்திற்கு மரம்  தாவி விளையாடுவதை பார்த்த , அவனின் தாத்தா, அவனிடம் பலமுறை சொல்லியும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு மரம் தாவுவதை நிறுத்த வில்லை, எனவே மரத்தில் பேய் இருப்பதாக சொல்லவே, நண்பர்கள் விளையாட பயந்தனர். ஆனால் நரேந்திரன் மரத்தில் ஏற தொடங்கினான், குதித்து விளையாடியபடி நண்பர்களிடம், ”இம்மரத்தில் பேய் இருந்திருக்குமானால் என்னை ஏற அனுமதித்திருக்காது, மரத்தில் பேய் இருப்பது என்பது பொய்யான விசயம்” என்றான். 

     எப்போதும் பகுதறிந்து புரிந்து பேசும் மனப்பான்மை கொண்டிருந்தார் விவேகானந்தர்.
அது மட்டுமல்ல தன் உடல் மீது அக்கறையை கொண்டு இருந்தார். நீச்சல், மல்யுத்தம், சிலம்பம், உடற்பயிற்சிகளைப் பழகி இருந்தார்.
தன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட பெண்ணிடம், தன்னையே மகனாக ஏற்றுக்கொள்ளம் படி அறிவுரை கூறினார். அமெரிக்காவில் தன் உரையை சகோதர, சகோதரிகளே என்று தொடங்கினார்.

     இப்படி விவேகானந்தர் வாழ்வில் நிகழ்ந்த அத்தனை நிகழ்வுகளையும் சொல்லிக்கொண்டே போகலாம்.
இன்றைய இளைஞர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்கவும், தங்கள் மீது நம்மைபிக்கை கொள்ளவும் விவேகானந்தரின் வாழ்க்கையை படித்தாலே போதும். அவரின் பொன்மொழிகளை வாசித்தால் போதும் வாழ்வு வசந்தமாகும்.

   எழுந்து நில் ! விழித்து கொள் ! இலட்சியத்தை அடையும் வரை ஓயாது உழை !!!
என்ற விவேகானந்தரின் உரையை மனதில் பொதித்து, அவரின் 150 வது பிறந்த நாளை கொண்டாடுவோம். விவேகானந்தரை போன்று நம் குழுந்தைகளுக்கு வேதங்களையும், உலக இலக்கியங்களையும், பைபிள் , இராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களை வாசிக்க செய்வோம். நல்ல பண்பு உள்ளவர்களாக மாற்றுவோம்.



     மாணவர் உலகம் இதழுக்கு எழுதிய கட்டுரை . 

   

Friday, January 10, 2014

பொங்கலை இம்மாதிரியும் கொண்டாடலாம்...!

இம்மாதிரியான அனுபவங்கள் எல்லாரும் கொடுக்க வேண்டும். இரண்டாவது பருவம் ஆரம்பத்தில் நெகிழி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். பள்ளி வளாகம் வீடு போன்றவற்றை நெகிழி அற்றதாக மாற்ற கூறினேன். அதன் தொடர்ச்சியாக மக்கும் குப்பை மக்கா குப்பை தரம் பிரிக்க கற்றுக் கொண்டனர். அதில் என் வகுப்பில் உள்ள மாணவன் உதயக்குமார் ஏன் குப்பைகளை காசாக மாற்றக்கூடாது என்றான்.

மறுசுழற்சிக்கு காகிதங்கள் செல்வதால், தினம் பள்ளியில் ( நான் வாங்கி படிக்க செய்வது) வாசிக்கும் செய்தி தாள், மற்றும் மாணவர்கள் குப்பையாக்கி கிழித்து போடும் பேப்பர்களை சேர்த்து வைத்து, விலைக்கு விற்கலாமே என்றான். முதலில் இது எதிர்விளைவை ஏற்படுத்தினால் , இவன் விடுமுறை நாட்களில் குப்பை பொறுக்க சென்று விடுவானே என்று அஞ்சினேன். இருந்தாலும் நேர்மறையான விசயங்களை என்றும் மனதில் பொதிய வைத்துள்ளவன் என்ற அடிப்படையில் அதற்கு ஒத்துக்கொண்டேன்.

காலை அரசு விதிப்படி காலைப்பிரார்த்தனை முடிந்தவுடன் டேவிட் காப்பர் மேயர், மற்றும் சத்குரு, மஹாத்ரேயா,ரா வின் தாயம் போன்ற புத்தகங்களில் இருந்து தினமும் ஒன்று அல்லது இரண்டு செய்திகளை வாசித்து கருத்து பகிர்வதுண்டு. மேலும் விவாதிப்பது உண்டு. எப்போதும் மாணவர்கள் மேல் நம்பிக்கை கொண்டு தான் செயல்படுவேன் என்பதால் , தீவிர யோசனையில் இச்செய்கையை கவனிக்க தொடங்கினேன். வகுப்பறையில் உள்ள குப்பைகளை தனியாக ஒரு பையில் சேமிக்க தொடங்கினார்கள். அதே சமயம் குப்பைகளை வகுப்பில் போடுவதையும் குறைக்க தொடங்கினார்கள்.

அன்றாட பணிகளில் மாணவர்களிடம் மேல் நாட்டு கல்வி முறை குறித்து விவாதிப்பது உண்டு. சுவாமி விவேகானந்தர் பற்றி கருத்துக்களை மாணவர்கள் தங்கள் பகுதியில் உள்ள நூலகத்திற்கு சென்று படித்து என்னிடம் பகிர்வதுண்டு. (இதை அனைவரும் செய்வது கிடையாது. ஆனால் வகுப்பில் குறைந்தது பத்து மாணவர்கள் தங்கள் பகுதியில் உள்ள நூலகத்தை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக வண்டியூர் பகுதி மாணவர்கள் அப்பகுதி நூலகத்தை பயன்படுத்துகின்றனர். அவர்களை பிறர் ஆச்சரியமாக பார்ப்பதை விவரித்துள்ளனர். அது குறித்து தனிப்பதிவு செய்கின்றேன்.)

சில நாட்களுக்கு முன் சீனா அய்யா துணைவியார் இங்கிலாந்து கல்வி முறை குறித்து என்னிடம் விரிவாக பேசினார்கள். அவர்கள் பேத்தி இங்கிலாந்து நாட்டில் தாங்கள் பயிரிட்ட காய்கறிகளை விற்று பணமாக்கி வீட்டிற்கு கொண்டு வருகின்றனர். அதுப்போல் தாங்கள் உருவாகிய கலைப்பொருட்களை சேல்ஸ் டே என்று உருவாக்கி விற்பனை செய்கின்றனர். வீட்டில் தாங்கள் உழைப்பில் கிடைத்த பணத்தொகையை கொண்டு வந்து கொடுக்கிறார்கள். பின்பு , அப்பணத்தை தங்களுக்கு பிடித்தமான அல்லது வேண்டியவர்களுக்கு( ஏழை மாணவர்களுக்கு ) உதவித்தொகையாக கொடுக்கின்றனர் ( இங்கு காண்பித்தால் அதை நாம் உடனே நம் வீட்டு தேவைகளுக்கு பிடிங்கி வைத்து விடுவோம் ) என்று என்னிடம் பகிர்ந்து கொண்டார். இக்கருத்தை என் மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டேன். நாம் தோட்டம் பயிரிட முடியாது. அதற்கு தேவையான இடம் இல்லை. மேலும் உருவாக்கிய பொருடகள் விற்பனைக்கான தரத்துடன் இருக்காது. அதற்கான பயிற்சி பெற்று கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லை. வீட்டிலும் உதவிகள் கிடைக்காது. பாடத்தின் பகுதியில் வரும் பொருட்களைத் தான் நாம் கலைப்பொருட்கள் என்று சொல்கின்றோம் என்று விவாதித்து , அது நம் கல்வி முறையில் கடினம் ஆகும் என்ற போது , உதயனும் கார்த்திக்கும் சேர்ந்து சார் , நம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு உதவினால் என்ன ? என கேள்வி எழுப்பினர்.

அந்த உதவி நம் உழைப்பில் உருவானதாக இருக்க வேண்டும் என்றேன். அப்போது தாங்கள் சேமித்து வைத்துள்ள பள்ளியில் குப்பையாக தெருவில் அல்லது குப்பை கூடையில் வீசப்படும் காகித்தை சேமித்து விற்போம் அப்பணத்தில் நாம் உதவி செய்வோம் என்றனர். இரண்டாவது பருவம் ஆரம்பத்தில் இருந்து சேமிக்க தொடங்கினர். ஒரு கண்டிசன் மட்டும் கொடுத்தேன். நம் வகுப்பில் சேரும் குப்பைகளை தான் உருவாக்க வேண்டும். நவம்பர் மாத இறுதியில் ஐம்பது
ரூபாய் பேப்பர் போட்டதில் கிடைத்தது. இந்த வருடம் பள்ளி தொடங்கியவுடன் செய்தி தாள் , மற்றும் சேகரித்த பேப்பர் போட முடிவெடுத்தார்கள். எதற்கு இப்போதே போட வேண்டும் என்றேன். சார் நாம் பொங்கலுக்கு உதவி செய்யலாமே என்றான் கார்த்திக்.

ஆனால் போதிய பணம் கிடைக்காதே என்றேன். பரவாயில்லை. நாங்கள் சேமிக்க போகிறோம். எங்களால் வாங்கி சாப்பிட்டது போக மீதி இருந்தால் கொடுக்கிறோம் என்றார்கள் நானும் சரி என்றேன். நானும் உதவுகின்றேன் என்றேன். அப்ப நீங்க ஒரு நாளைக்கு ஒரு ரூபாய்க்கு மேல் போடக்கூடாது என்றனர். ஓகே என்றேன்.

பொங்கல் நெருங்கியது. நாளை சனிக்கிழமை மாணவர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் . அனைவரும் வந்திருக்கும் இன்று ( 10-1-2014) கொண்டாடுவது என முடிவெடுத்து, புதன் அன்று பேப்பர் எடை போட்டார்கள். நாற்பது ரூபாய் கிடைத்தது. ஏற்கனவே ஐம்பது, இப்போது நாற்பது, உண்டியல் பணம் எண்ணினோம் நாற்பது தேறியது. மொத்தம் நூற்றி முப்பது வைத்து , துணி எடுத்து கொடுக்க முடியாதே என்று வருந்தினர். நான் பரவாயில்லை எத்தனை பேருக்கு எடுப்பது என முடிவெடுங்கள் என்றேன். ஒருவனுக்கு மட்டும் போதும் என்று சொன்னார்கள். ஏன் என்றேன். சார் அவன் யுனிபார்ம் தவிர வேறு எதையும் அவன் போட்டதில்லை. அதுவும் இலவசமாக கொடுத்தது. நான் விசாரித்தேன் அவனுக்கு புது துணிமணி கிடையாது என்றான் கார்த்தி. சரிடா... அவனுக்கு உதவி வேண்டிய புது டிரஸ் கொடுத்து விடுவோம் என்றேன். முடிவெடுத்து அவன் சைஸ்க்கு சட்டை பேண்டு எடுத்து கொடுப்பது என முடிவெடுத்து, ஒன்றாம் வகுப்பு அ ஆசிரியரிடம் அனுப்பினேன்.

அவர் சார் நானும் இதில் பங்கெடுக்கலாம இல்லை வேறு ஒரு பையனுக்கு எடுத்து தருகின்றேன் என்றார். நான் மன்னிக்கவும் இது அவர்கள் உழைப்பில் அவனுடன் இருக்கும் ஒருவனுக்கு உதவும் உதவி, ஆகவே அவர்கள் முடிவெடுத்த ஒரு பையனுக்கு மட்டுமே கொடுக்க போகின்றேன். பின்னொரு நாளில் மாணவர்களுக்கு உதவி செய்யலாம் என்றேன். கடைசியில் அவர் நீங்கள் கொடுக்கும் தொகையில் சரிபாதி தருகின்றேன் என கேட்டதன் பேரில், மாணவ தலைவன் கார்த்தியிடம் அனுமதிப் பெற்று , அவரையும் இதில் சேர்த்து கொண்டோம்.

இன்று மதியம் உணவு வேளை முடிந்து வாய்ப்பாடு, தமிழ் வாசிப்பு, ஆங்கில புது வார்த்தைகள் படித்த பின், கார்த்தி பொங்கல் விழா ஆரம்பிப்போம் என்றான். அனைவரும் மகிழ்ச்சியாக தங்கள் உழைப்பின் மூலம் கிடைத்த புது துணியை வழங்கினார்கள்.

இன்றைய தினம் மன நிறைவாக சென்றது. அடுத்து இரண்டு மாதத்தில் நாம் ஊதுவர்த்தி, சாம்ராணி, மெழுகு வர்த்தி , கிரிட்டிங்க் கார்டு போன்றவை செய்து, அப்பணத்தின் மூலம் நம் பள்ளியில் பயிலும் இயலா குழந்தைகளுக்கு உதவுவோம் என்று முடிவெடுத்தனர். உதவும் பணபை இந்த பொங்கலில் விதைத்துள்ள மனதிருப்தியில் அனைவருக்கும் , மாணவர்களுடன் சேர்ந்தே இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.

Monday, January 6, 2014

செக்ஸ் ...செக்ஸ்...செக்ஸ்....வாழ்வின் தேவை!

        நான் தொடக்கப் பள்ளி அளவில் செக்ஸ் கல்வி தேவை என்பதை (என் பிளாக் வாயிலாக) பலமுறை வலியுறுத்தி உள்ளேன். செக்ஸ் என்பது மனிதன் உணர்வில் இயற்கையாகவே பொதிந்துள்ள விசயம். அது அன்பின் பெருக்கின் வெளிப்பாடு. இதை தவிர்க்க முடியாது. ஆனால் நாம் உணர்வுகளை கட்டுப்படுத்தலாம். கட்டுப்படுத்தலாம் என்பதை விட முறைப்படுத்தலாம். 




      முறைப்படுத்துதல் இல்லாத போது நம்முடைய பார்வை காமப்பார்வையாக மாறி , வெறி கொண்டு, டெல்லி அல்லது சமீபத்திய காரைக்கால் விசயமாக மாறவே வழி வகுக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

     செக்ஸ் பற்றிய சரியான புரிதல் இல்லாமையே நடக்கும் அனைத்து கற்பழிப்பு, பாலியல் வன்முறைகளுக்கு காரணம்.

    நம் தமிழ் சமூக அமைப்பில் பண்பாடுகளை மறந்து வாழ்கின்றோம். நம் சமூக அமைப்பில் செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசி உள்ளார்கள். கால மாற்றத்தின் விளைவு செக்ஸ் பற்றி பேசுவது தவறு என்று சொல்லி சொல்லியே ,அதை பேச மறந்து விட்டோம். செக்ஸ் பற்றி பேசுவது என்பது பாவ செயலில் சேர்த்து விட்டனர்.

    இதன் விளைவால் நம் குழந்தைகள் நமக்கு தெரியாமல் செக்ஸ் பற்றி பேச தொடங்கிவிட்டார்கள். முறையான செக்ஸ் சிந்தனையில்லாமல், தொடங்கப்படும் பேச்சு, அவர்களை கணினி உலகத்தில் கையளவு கைபேசியில் நீலப்படங்களை காண உதவியிருக்கிறது என்பது தான் உண்மை.

      மூன்றாம் வகுப்பில் எழுத கற்று கொண்டவுடன் அவன் இவ்வாறாக எழுத ஆரம்பித்து விடுகிறான். உன்னை லவ் பண்றேன். உன்னை பார்க்கலைன்னா எனக்கு என்னவோ மாதிரி இருக்குது . நீ டூ போடாதா.. என் கூட பேசு . உன்னை நான் காதலிக்கிறேன். இது போன்ற கிறுக்கலகளை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது. மாணவர்களை நன்கு உற்று நோக்கும் ஆசிரியர்கள் இதை அறிய முடியும்.

     பள்ளி முடிந்து செல்லும் போது வகுப்பறையின் குப்பைகளில் இது மாதிரியான மனகுப்பைகளை காண்பது மிகவும் சாதாரண விசயமாக இருக்கிறது. ஆசிரியர்களுக்கு இது சாதாரண விசயமா இல்லை என்பது தான் உண்மை. இந்த மனகுப்பைகளை போக்குவதில் தான் நம் மாணவர்களின் எதிர்காலம் அடங்கியுள்ளது என்பதை புரிந்தால், செக்ஸ் கல்வியின் அவசியத்தை ஆரம்ப கல்வியில் ஆரம்பிக்க ஆதரவை உடனே கொடுத்து விடுவீர்கள்.

     சமீபத்திய சமச்சீர் புத்தகம் ஆங்காங்கே புத்தகங்களில் மூன்றாம் வகுப்பு முதல் சில விசயங்களை கொண்டு வந்துள்ளது. குட் டச் பேட் டச் பற்றி பேச ஆசிரியர்களுக்கு அனுமதி அளித்து உள்ளது. இருப்பினும் அதனை ஒரு பாடமாக வைப்பது தான் நம் எதிர்கால சந்ததியினர் ஆரோக்கியமான நட்புடன் , ஆண் பெண் பேதம் இன்றி , செக்ஸ் பற்றிய புரிதலுடன் இருக்க முடியும்.

      ஏன் ? அவசியம் என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள். இன்று அளவிலும் 10, +1,+2 வகுப்புகளில் கருவுறுதல் பாடம் நடத்தப்படாமல் இருபதற்கு காரணம் கொஞ்சம் சொன்னீர்களானால் அதற்கான அவசியம் புரிந்து விடும். ஆசிரியரும் நடத்த தயங்குகிறார். மாணவர்களும் கேட்பதற்கு சங்கடப்படுகிறார்கள். ஏனெனில் செக்ஸ் பற்றி புரிதல் இல்லை. ஆகவே பேச மறுக்கின்றனர்.

   

                             

      நம் முன்னோர்கள் அதனால் தான் கோயில்களின் காம விளையாட்டு சிற்பஙகளை வைத்து உள்ளனர். நான் வேலைக்கு சேர்ந்த (22வயது ) புதிதில் அழகர் கோயிலுக்கு மாணவர்களை பள்ளியில் இருந்து அழைத்து சென்றனர். பேருந்து நிறுத்தி விட்டு , பதினெட்டாம் படியானை கும்பிட்டு , நுழைவாயில் சிற்பங்களை மாணவர்கள் பார்க்க, அதில் ஒருவன் அங்க பாருடா... என சொல்ல.. என்னுடன் வந்த மூத்த ஆசிரியர் டேய் செருப்பை கலட்டி போட்டுட்டு வேகமா நட ... பிராக்கு பார்க்காத... மலைக்கு மேல போறோம் முருகனை பார்க்கிறோம். பின்னாடி இங்க வந்து மண்டப்பதிலே வந்து சாப்பிடுவோம்... என அறிவுரை கூறி நகர்த்தினார்.ஆனால் எட்டாம் வகுப்பு மாணவன் குசு குசு என பேசி சிற்பத்தை ரசிக்க.. என்ன சிரிப்பு வா வேகமா என்று அதட்ட தொடங்கினார்.

     இப்படி தான் நாம் நம் குழந்தைகளுக்கு தேவையில்லாத எதிர்பார்ப்பை உருவாக்கி, அவர்களை கடத்தி விடுகிறோம். இந்த எதிர்பார்ப்பு மறைக்கும் விசயத்தில் உள்ள ரகசியத்தை அறிகின்றேன் என பாதை தவறி செல்கின்றனர்.

    நான் இளைஞனாக இருந்த காரணத்தால் என்னிடம் நன்றாக பேசுவார்கள். மேலே சென்று தீர்தம் ஆடி, மலையடிவாரம் வந்து , சாப்பிட்டு முடித்தவுடன் , வாருங்கள் சிற்பம் பார்க்கலாம் என அழைத்தேன். மூத்த ஆசிரியர் என்னை பார்த்து, சரவணன் சும்மா இருங்க தேவையில்லாம, எதையாவது காட்டி மாட்டிக்க போறிங்க.. பெரிய டீச்சர் பார்த்த உங்கள தப்பா நினைக்க போறாங்க.. நீங்க பெர்மணன்டு ஆக வேண்டாமா..? உங்க மீது இருக்கிற நல்ல இமேஜ் போயிடும் என்று அதட்டினார்.

    சட்டை செய்யாமல் ,நான் மெதுவாக நகர்ந்தேன். என்னிடம் பேசும் சாக்கில் அனைவரும் என்னை நோக்கி நகர்ந்தனர். நான் அவர்களிடம் ஒவ்வொரு சிற்பமாக பார்க்க அனுமதித்தேன். சார் இவன் அதை பார்க்கிறான் சார் என மெல்ல என்னிடம் ஒட்ட ஆரம்பித்தனர். நான் அவர்களிடம் கோயில்களில் இது மாதிரி சிற்பங்கள் ஏன் வைக்கிறாங்க. தெரியுமா என்று கேட்டேன். அவர்கள் இப்போது சிற்பத்தை மறந்து அதானே ஏன் என்று என்னிடம் கேட்க ஆரம்பித்தனர். நீங்களே சொல்லுங்கள் என்றேன்.

     சார் ... தெரியாத விசயத்தை தெரிஞ்சுக்க தான் என்றனர் பலரும். டேய் இத போய் யாரும் சொல்லி கொடுப்பாங்களாடா என்றான், மற்றொருவன். சபா
ஷ் என்று மேலும் அவர்களை உற்சாகப்படுத்தி கேட்டேன். சார் கோயிலுக்கு தப்பு பண்ணிட்டு வரக்கூடாது,அத சொல்றதுக்கு தான் என்றான் முதல் மதிப்பெண் எடுப்பவன். இது என்ன தப்பா ? என கேட்டேன். சார் எங்க வயசுல பார்க்கிறது தப்பு தானே என்றான் அவர்களில் சிறியவன்.


    தவறு என்றால் ஏன் இப்படி யொரு சிற்பத்தை கோயில் வாயிலில் சிறியவர் முதல் பெரியவர் முதல் அனைவரும் காணும் படி சிற்பத்தை செதுக்கி வைக்கின்றனர் என எதிர் கேள்வி எழுப்பினேன். நமக்கும் கல்யாணம் ஆனா இப்படி தாண்ட செய்யணும் அத சொல்ல தான் என்றான் ஆர்வம் கூடிய ஒருவன். அனைவரும் ஓ என கத்தினர். மூத்த ஆசிரியர் என்னை முறைத்தார்.

      கல்யாணம் ஆகலைன்னா செய்ய கூடாதா? என்றான் அவனுடைய கூட்டாளி. அதை விட பயங்கர சத்தம் . மேலும் பல மாணவர்கள் கூடினர். சூப்பரா சிந்திக்கிறான். அப்படி யெல்லாம் செய்ய கூடாது என்று சொல்ல தான் இப்படி வைச்சுருக்காங்க...என்று மற்றொருவன், முந்தயவனின் வாயை அடைக்க முயன்றான். பலர் ஏன் சார் சொல்லுங்க.. டேய் சும்மா இருங்கடா என அமைதி படுத்தினர்.

        இப்போது நான் கேட்டேன். இந்த சிற்பத்தை பார்த்தவுடன் என்ன மாதிரி உணர்கிறீர்கள்.? சார் ஆனந்தம் சார்... , சந்தோசமா இருக்கு சார்..,. ச்சீ அசிங்கம் சார்..,இதையெல்லாம் கோயில்ல வைச்சுருக்காங்க பாருங்க என வாய்க்கு வந்ததை சொன்னார்கள். கடைசியில் எல்லோருமோ ஒப்புக்கொண்டனர் ஆசையா பார்க்கணும் போல இருக்கு சார்... சந்தோசம இருக்கு என்று.

        கோயில் எதுக்கு கட்டியிருக்காங்க...? என்று கேட்டேன். சாமி கும்பிட என பதில் வந்தது. எதற்கு சாமி கும்பிட வேண்டும்? என மீண்டும் கேட்டேன். நல்லா படிக்க, நல்லா இருக்க , கவலையில்லாம வாழ, சந்தோசமா வாழ, நல்ல புத்தி கொடுக்க... என பதில்கள் வந்து விழுந்தன.

        கோயிலுக்கு வந்தா நல்லது நடக்கும் ,அப்படி தானே என்று தொடர்ந்து கேட்டேன். ஆமாம் என்றனர்.

       கோயில் வந்தால் வாழ்க்கை மேன்மை அடையுமா? வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்குமா? என கேட்டேன்.

       அனைவ்ரும் ஒருமித்த குரலில் சாமி கும்பிட்டா சாமி நம்மள நல்லா வச்சுக்குவார் சார் என்றனர்.

       கோயில் உள்ளே என்ன சாமி வச்சுருக்காங்க..?

       இந்த கோயிலோட சாமி அழகர் சாமி , முருகன், கருப்பன், என பல பதில்கள் வந்தன. உள்ளே சென்று பார்த்த பின் என்ன சாமி என பார்த்து பதில் சொல்லுங்கள். அவரை மூலவர் என அழைப்போம் என்றேன்.

       இந்த சிற்பம் காட்டுவது உடல் சார்ந்த இன்பமா? இல்லையா ? என்றேன்.

உடல் சார்ந்த இன்பம் என்றனர்.

கோயில்கள் நமக்கு நல்ல விதமான வாழ்க்கையை, உண்மையான இன்பத்தை கொடுக்க வேண்டுமானால், நாம் உடல் ரீதியான சிற்பம் காட்டும் இந்த இன்பத்தை கடந்து போக வேண்டும் .

ஆகவே தான் கோயில்களின் வாயில்களில் இம்மாதிரியான சிற்பங்களை படைத்துள்ளனர். மேலும் நாம் கோயிலுக்கு வரும் போது நம்மிடம் உள்ள கெட்ட எண்ணங்களை வெளி பிரகாரத்துடன் விட்டுவிட்டு, முழுமனதோடு ஈடுபாட்டுடன், மூலவரை வணங்க வேண்டும் என்பதை உணர்த்த தான் நம் முன்னோர் வெளி பிரகாரத்தில் சிற்பஙக்ள் வடித்துள்ளனர்.
....என நீண்ட உரையை நிகழ்த்த அனைவரும் கைதட்ட , மூத்த ஆசிரியர் நடந்தவற்றை கண்டு வியந்து , நான் உன்னை என்னவோ நினைச்சேன் விசயமான ஆளாத்தான் இருக்க என்று பாராட்டினார்.

      மாணவர்கள் இயற்கையில் பால் உணர்வுகளுடன் தான் இருக்கிறார்கள்.அதை தெளிவு படுத்த வேண்டியது நம் கைகளில் தான் இருக்கின்றது. செக்ஸ் கல்வியின் அவசியத்தை உணர்ந்து ஆக்க பூர்வமாக நம் குழுந்தைகளிடம் சொல்லுவோம், அறியாமையை களைவோம், செக்ஸ் சார்பான குற்றங்கள் சமூகத்தில் தொடர்ந்து நடவாமல் இருக்க இது ஆரம்பமாக இருக்கட்டும். மனதில் ஏற்படும் வக்கிரங்களை ஆன்மீக கருத்துக்கள் மூலம் செக்ஸ் கல்வி கொடுத்து களைவோம்.
 

Friday, January 3, 2014

இந்த வருடத்தின் முதல் நாள்.. கடவுளே காப்பாத்து...!

        பள்ளி துவங்கிய புதுவருடத்தின் முதல் நாள் வெகு இயல்பாக, இயல்பை காட்டிலும் கூடுதலான மகிழ்வுடன் கழிந்தது. சார், கிறிஸ்துமஸ் அன்று சன் டிவியில் சாண்டா வந்து நான் எழுதி கேட்டு இருந்த டிராயிங் புத்தகத்தை தந்தார் என்றான் மணி. 

”அட பரவாயில்லையே. என்னை டிவியில பார்க்கலையா?” ( ஏண்டா வெட்டி பயளே நீ மட்டும் டிவியில வந்த நாங்க பார்கணும் ? மைண்டு வாய்ஸ் பேசியது)

“ சார் ... ஏசு மனிசன் தானே? ”என கேட்டான் கார்த்தி.

“சார் ஏசு போல நபிகள் நாயகமும் மனிசனா தானே வந்தார்!” என்றான் இப்ராஹிம்.

”சார் , கிருஷ்ணன் கூட மனுசன் தானே?” என்றாள் செல்வராணி. ரிசானா ,” சார்... ஏசு, நபிகள் நாயகம், கிருஷ்ணண் எல்லோரும் கடவுள் தானே? “.
“ ஆம்” என்றேன்.


   

தேவதர்ஷினி என் சிந்தனையை தூண்டும் ஒரு கேள்வியை கேட்டாள். “ சார்.. அவுங்க எல்லாம் சாமி தானே சார்.. மக்கள் கஷ்டம் போக்க வந்தவங்க தானே சார், ஏன் சார் சாமியாவே வந்து நமக்கு உதவியிருக்கலாம் இல்ல...ஏன் மனிசனா வந்தாங்க...?”

“சார்.. அதானே !”என்றான் கார்த்தி.

யுவராஜ், “ சாமிய எல்லாம் தப்பா பேசக்கூடாது... சார் கிட்ட மன்னிப்பு கேளு... சார் மூளையை போட்டு குழப்பிக்காதீங்க...தமிழ் முதல் பாடாம் நூறு வயது தருவன படிப்போம்...”

“சார் ,எனக்கும் அதே டவுட்டு தான் சார்... கடவுள் ஏன் சார் மனுசனா வரணும்.. அரக்கன் ,பேய் எல்லாம் மனுசன் மாதிரி இல்லையே.. மனுசனா இருந்தாலும் கொம்பு வச்சு எதாவது மிருகம் சாயல்ல தான் இருக்காங்க..” என தனக்கே உரிய புன்முறுவலுடன் மணிப்பாண்டி தன் அறிவை வெளிப்படுத்தினான்.

தெளிவான சிந்தனை கொஞ்சம் யோசிங்க .. விடை கிடைத்துவிடும் என்றேன்.

“ சார்... கோவிலுக்கு போனா பொங்கல் தர்றாங்க... சர்ச் போனா அப்பம் தர்றாங்க... மசூதிக்கு போனா குர்பானி கறி , நோம்பு கஞ்சி, பிரியாணி தர்றாங்க.. “ என்று எப்போதும் போல் சாப்பாட்டு விசயத்தை தெளிவாக பேசி யுவராஜ்ஜை உசுப்பு ஏத்தினான் சஞ்சய்.

“ சார்... கோவிலுக்கு போனா கஷ்டம் தீர்ந்திடும், சாமி கும்பிட்டா நல்லது நடக்கும்....இதில்லெல்லாம் ரெம்ப ஆராய்ச்சி பண்ணக்கூடாது.... நூறு வயது தருவன...பார்ப்போம் “ என மீண்டும் தன் பக்தியை வெளிபடுத்தினான் யுவராஜ்.

அப்போது யோசனை வந்தவளாக” சார், நீங்க காலையில ரவுண்ட்ஸ் போயிருந்தப்ப...மூன்றாம் வகுப்பு டீச்சர் திருப்பதி லட்டு கொண்டு வந்தாங்க... லீவுல.. திருப்பதி போயிருந்தாங்களாம்... டேபிள் ல வச்சுருக்கேன் ...” என்றாள் திவ்யா.

”வாங்க எல்லோரும் பிச்சு திண்ணுவோம்” என்றேன்.

”சார் நாங்க வாங்கி சாப்பிடக்கூடாது” என்றாள் ரிசானா.
”ஏய் அதெல்லாம் ஒண்ணுமில்லே சும்மா சாப்பிடு” என்றான் இப்ராஹிம்.

கார்த்தி அனைவருக்கும் பங்கிட்டு கொடுக்க ஆரம்பித்தான்.

மீண்டும் நினைவு வந்தவளாக திவ்யா,” ரிசானா... இரண்டாம் பருவம் கடைசி பரீட்சைக்கு நீ கொடுத்த பேனா .... மறந்திட்டேன்..தாங்க்ஸ்” ” பரவாயில்லை “ என்றாள் ரிசானா.

” சரி எல்லோரும் கவனிங்க... எதுக்கு தாங்க்ஸ் சொன்னே திவ்யா?” என்றேன்.

“சார், என் போனாவில் இங்க் தீர்ந்து விட்டது அதனால், நான் பரீட்சை எழுத போனா வாங்கினேன்...திருப்பி கொடுக்க மறந்துட்டேன்... இப்ப கொடுத்து உதவியதற்கு தாங்கஸ் சொன்னேன்...”

“ கார்த்தி.... சார் எதையோ சொல்ல வர்றார் பார்த்தியா? “ என்றான் பாண்டி.

“சாமிகிட்ட கேட்டா தந்திருக்குமா? மனிசன் கிட்ட கேட்டதால் தானே கிடைச்சுது என சொல்ல வர்றீங்க“ என்றான் கார்த்திக்.

“டேய் சாமி கும்பிட்டு வந்து பரீட்சை எழுதினா..அதனால் தான் தடங்கல் வராமா.. சாமி... ரிசானா மூலமா போனா கொடுத்துள்ளார் சாமி...” என்று தன் பக்தியை வெளிப்படுத்தினான் யுவராஜ்.

” சார்.. மனுசன் தான் இன்னொரு மனுசனுக்கு உதவ முடியும்... சாமி வந்து உதவுறது கஷ்டம்...” என்றான் கார்த்தி.

“சபாஸ்...இப்ப சொல்லு பார்ப்போம்.. சாமி ஏன் மனுசன் உருவத்தில் வருகிறார்...?” என கேட்டேன்.

“மனுசன் மட்டுமே இன்னொரு மனுசனுக்கு உதவ முடியும். உதவிகளால் மட்டும் தான் மனுசன் பயன் பெற முடியும்.. சந்தோசமா வாழ முடியும்“ என்றான் பாண்டி.

“ யுவராஜ் கோபப்படாம கேட்கணும்....தெய்வம் மனுசனா வர காரணம்.. அருகில் உள்ள மனிதர்கள் தான் சக மனிதர்களுக்கு உதவ முடியும். இப்ப எழுத படிக்க தெரியாத ஒருத்தனுக்கு படிக்க உதவும் போது , அவன் வாசிக்கும் போதெல்லாம்.. எனக்கு யுவராஜ் தான் வாசிக்க கத்துக்கொடுத்தான் என சொல்லி மகிழ்வான்...அதேவேளையில் உனக்கும் சந்தோசம்...நம்மால் ஒருவன் பயன்பெற்றுள்ளான் எனும் போது மிக்க மகிழ்ச்சி அடைவாய் . “ என்றேன்.

“ ஆமாம்” என்று தலையசைத்தவாறு யுவராஜ்

”மனுசனா பிறந்து உதவுறவன் தான் சாமின்னு சொல்லுறீங்க...” என்றான். அனைவரும் கை தட்டி... வாடா நூறு வயது தருவன பாடம் படிப்போம் என்றனர்.

நான் இப்போது கதை சொல்ல தொடங்கினேன்.
 

மதுரை சரவணன்.
9344124572