Saturday, January 29, 2011

கோடிகள் கொடுக்க தயார்...!

கரையில் அவள்
கால்வயிற்று கஞ்சிக்காக
கைப்பிள்ளை வறண்ட மார்பில்
உயிர் தேடி ...

உயிர் கொடுப்பாள் என்று தான்
கடல் மாதாவை வேண்டி
துடுப்பு எடுத்து போனான்...
வரவில்லை அவன்
ஆனால் வந்தது அது
குண்டடிப்பட்டு...!


 குழந்தை வீல் என்றழுதது
பசியின் மயக்கத்தில் தடுமாறிய
அவளுக்கு ...
கடலின் கவுச்சி
நாற்றம் வித்தியாசப்படவே
கால் ஊன்ற முடியாமல்
தடுமாறி ஓடினாள்
கடல் நோக்கி...

கரைஒதுங்கியப்படகை
சுற்றிய கூட்டம் ஓலமிட...

வாழ்க்கைப் போராட்டத்தில்
என்றாவது ஒருநாள்
கரையேறி விடுவோம்
என்ற அவன்...
இன்று கரை ஒதுங்கிப்போனான்...!

இரைத்தேடிப்போனவன்
இரையானான்...
தமிழனாய் பிறந்ததால்
தரை ஒதுங்கிப்போனான்
தாரை தாரையாய் கொட்டியது
தமிழ் இரத்தம் ...
சுட்டவனுக்கு தெரியும்
எவனும் கேட்க வரமாட்டனென்று..
தமிழன் இளிச்சவாயன்
தமிழ் ஆட்சியாளனுக்கு
தமிழன் என்பவன்
ஒரு குடும்பத்துக்குள் அடைப்பட்டவனென்று..!

தமிழக மீனவனின் உயிர்
ஐந்தாண்டுக்கொருமுறை
பேசப்படும் தேர்தல் வாக்குறுதி....!

என் மீனவ சகோதரனின்
உயிருக்கு லட்சங்களை தரும்
அரசே ..! அரசியல் வாதியே...!
பல கோடிகளை தரத் தயாராய் இருக்கிறோம்
என் மீனவ சகோதரனின் உயிரை திருப்பி கொடு
என கேட்கவில்லை...
கொன்றவனின் உயிரை எடுக்க முடியுமா..?



Wednesday, January 26, 2011

16 கூடவே கூடாது



தேசிய வாக்காளர் தினம் எம் பள்ளியில் ஜனவரி 25 கொண்டாடப்பட்டது. அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் . வாக்காளர் பட்டியலில் நம் பெயரை கவனமாக சேர்க்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டது. 
காலை ஒன்பது மணிக்கே புகைப்பட அடையாள அட்டை வாங்க மக்கள் ஆர்வமாக பள்ளிக்கு வந்தனர் . வந்த அனைவரையும் அந்த வார்டு சூப்புரைசர் உறுதிமொழி எடுத்த பின் தான் கொடுப்போம். காலை பத்து முப்பது மணிக்கு வாருங்கள் என அனுப்பிவைத்தார். சரியாக பதினொரு மணிக்கு விழா ஆரம்பமானது. விழாவிற்கு தலைமை தாங்கினேன். பின் நான் உறுதிமொழி வாசிக்க , அனைவரும் கூறினர். பின் என்னை பேச அழைத்தனர். இன்று முதல் வாக்காளர் ஆவதை நாம் பெருமையாக கொள்ள வேண்டும். நமக்கு கொடுக்கப்பட்டுள்ள வாக்குரிமையை தவறாமல் பயன்படுத்த வேண்டும். நாம் பணம், மொழி, சாதி , இனம் ஆகியவற்றிற்கு இடம் கொடுக்காமல் சிறந்த ஒரு வேட்பாளருக்கு ஓட்டளிக்கவேண்டும். நாம் யாருக்கும் ஓட்டளிக்க விரும்பாவிட்டாலும் அதையும் நாம் வாக்குச்சாவடி சென்று பதிவு செய்யலாம் என பேசி முடித்தேன். பின்பு புதிய வாக்காளருக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டது.


      1989 ல் வாக்காளர் வயது வரம்பை 21ல் இருந்து 18 ஆக குறைத்து சட்டம் இயற்றப்பட்டது . ஆனால் தற்போது அதனை 16 ஆக குறைக்கலாம் என்று ஒரு விவாதம் நடைப்பெற்று வருகிறது . என்னைப் பொறுத்த வரை அது தவறான வயதாகும் . பள்ளிப்படிப்பை கடந்த நிலையில் , நல்லது கெட்டது எது என புரியாத வயது. அதுவும் அவர்கள் வெளியுலகிற்கு காலடி எடுத்து வைத்து , புதிய அனுவங்களை பெறும் வயது. அதில் அவர்கள் எதையும் முடிவு செய்யும் பக்குவத்தை அடைந்திருக்க மாட்டார்கள். அவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருப்பதால்பணம் , சாதி, மொழி , இனம் ஆகியவற்றிற்கு எளிதில் வயப்படுவர்களாக இருப்பதால், இவை சார்ந்தே வாக்களிக்க வாய்ப்பு உள்ளது. அதனால், மக்களுக்கு சேவை செய்யும் மனபக்குவம் உள்ள வேட்பாளரை தேர்ந்தெடுக்க தவறி விடுவர். நம் ஓய்வு பெற்ற தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா அவர்களும் ஓட்டளிக்கும் வயதை16 வயதாக மாற்றக்கூடாது என்கிறார்.

          என்ன நான் சொல்வது சரிதானே ? பதிலை பகிரவும்.
  

Tuesday, January 25, 2011

பாலா திருமணம்


மதுரையில எங்க பாலா கல்யாணம் அனைவரும் வாங்க... வாங்க... வாழ்த்தி விட்டு செல்லுங்கள். 





மதுரையின் சோலையழகுபுரம் பாலாவின் திருமணம் நாளை காலை பத்துமணியளவில் சந்திரா குழந்தை கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. அனைத்து பிளாக்கர்களும் வருகை தந்து திருமணத்தை சிறப்பித்து தரும்படி மதுரை பிளாக்கர்கள் சார்பாக வேண்டுகோள் வைக்கிறேன். வாரமுடியாத அன்பு நெஞ்சங்கள் இப்பதிவின் மூலம் தங்களின் வாழ்த்தை தெரிவிக்கலாம்.



இன்று மாலை சீனா அய்யா, அவரின் துணைவியார்,கார்த்திகைப்பாண்டியன்(கா.பா) ,சிரிதர் மற்றும் நான் நிச்சியார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அருமையான விருந்து . நாளை மெனுவையும் சிரிதர் பார்த்து வைத்துள்ளார். உணவு பலமாக இருக்கும் என்று நம்புவோம் என்று என் தொப்பையை பார்த்தார். கா. பா. நாளை கல்லூரியில் கலை நிகழ்ச்சி என்பதால் விரைந்து சென்று விட்டார். அவர் சென்ற சிறிது நேரத்தில் இரவு உணவு தயாரானது.பாவம் வடை போச்சு என்று சிரிதர் வருத்தப்பட்டார். பின்பு இரவு ஒன்பது மணி வாக்கில் பாலாவிடம் விடைபெற்று சென்றோம். அனைத்து பிளாக்கரும் வர வேண்டும் எனஅன்பு வேண்டுகோள் வைத்துள்ளார். நீங்களே பாருங்க கீழே எப்படி இரு கரம் கூப்பி நம்மை அழைக்கிறார் என்று. அதற்காகவாது அனைவரும் வந்து சேரவும் . காலை ஒன்பது மணிக்கு சீனாய்யா வீட்டில் ஒரு சிறப்பு கலந்தாய்வு நடைபெறலாம் . நேசன் வருகை புரிகிறார் . எனவே, இலக்கியம் மிக்க திருமணமாக இருக்கும்.




பாலா அனைத்து வளங்களும் , செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.


திருமண மண்டபம் மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரில் உள்ளது. தியாகராசர் கலைக் கல்லூரி முன்பு உள்ளது. தவறாமல் கலந்து கொண்டு வாழ்த்தவும். கரைக்குடி ஆர்.வி. சந்துரு , அழகு பாண்டி நாளை திருமணத்திற்கு வருகை தருகின்றனர்.


முதல் தேசியக் கொடி

1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி சுதந்திரம் பெற்றோம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சுதந்திர இந்தியாவில் டெல்லியில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி தமிழகத்தில் உருவாக்கப்பட்டது என்ற தகவல் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

  இந்திய விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்கு அளவிட முடியாதது என்பதை அனைவருக்கும் தெரியும். பெரிய போராட்டங்கள் மட்டுமின்றி நுட்பமான விஷயங்களில் கூட தமிழகம் அதன் பங்களிப்பை பெரிதும் வழங்கியுள்ளது. அதில் ஒன்று தான் தேசியக் கொடி.

   ஸ்கிரீன் பிரிண்டிங் என்ற தொழில் நுட்பம் அவ்வளவாக பரவாத காலம் அது. அப்போது வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஆர். வெங்கடாசலம் என்பவர் வெளிநாட்டு தொழில் நுட்பத்தில் பட்டுத் துணியில் ஸ்கிரீன் பிரிண்டிங் செய்து வந்தார்.தரமாக செய்து கொடுத்ததால் இவ்ருக்கு ஆர்டர்கள் குவிந்தன. அந்த காலகட்டத்தில் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கும் காலம் நெருங்கி வந்தது.

     சுதந்திரம் பெற்றதும் நாடு முழுவதும் கொடியேற்ற வேண்டும் . அதற்கு ஆயிரக்கணக்கான தேசியக் கொடிகள் தேவைப்பட்டது. இதற்கானக கொடி தயாரிக்கும் நிறுவனங்களூக்கு தகவல் தெரிவித்தனர். இத் தகவலை குடியாத்தம்வெங்கடாசலம் அவர்களுக்கு அகமதாபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஜசானி என்பவர் தெரிவித்தார். தனக்கு லாபம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்று அந்த கொடி தயாரிப்பு ஆர்டரை வெங்கடாசலம் அவர்கள் ஏற்றுக் கொண்டார்.

 சுதந்திர தினத்தன்று நாடெங்கும் பறக்க விட ஒரு கோடி கொடிகளை வெங்கடாசலம் தயாரித்து கொடுத்தார்.1947 ம் ஆண்டு ஆகஸ்டு 14ம் தேதி நள்ளிரவு கடிகாரம் 12 முறை அடித்து ஓய்ந்ததும் , டில்லியில் கூடியிருந்த தலைவர்கள் மத்தியில் நேரு பேசினார். உலகமே உறங்கி கொண்டிருக்கும் இந்த இரவு நேரத்தில் இந்தியாவுக்கு விடிகிறது. சுதந்திர இந்தியா பிறந்து விட்டது என கணீர் முழக்க மிட்டார்.

டெல்லி பாராளுமன்ற மைய மண்டபத்தில் மவுண்ட் பேட்டன் பிரபு உள்ளிட்ட ஆங்கிலேய தலைவர்களும் , மனம் முழுவதும் மகிழ்ச்சியுடன் இந்திய தலைவர்களும் கூடி நின்றனர். சுதந்திர இந்தியாவில் தேசியகொடியை மைய மண்டபத்தில் நேரு ஏற்றினார்.அந்தக் கொடி பிறந்தது குடியாத்தத்தில்!


     மறு நாள் காலை 8.30 மணிக்கு டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இந்தியா கேட் முன்பு ஆயிரக்கணக்கான மக்களின் உணர்ச்சிகரமான கர கோஷங்களுக்கு இடையே பிரிடிஸ் கொடி இறக்கப்பட்டு , குடியாத்தத்தில் தயாரான இந்திய தேசியக் கொடிஏற்றப்பட்டது. அன்றே இந்தியாவின் பிரமாண்டமான டெல்லி செங்கோட்டையிலும் நம் தேசியக்கொடி ஏறியது. இதன் மூலம் சுதந்திர இந்தியாவின் முதல் தேசியக் கொடியை தயாரித்து அளித்த பெருமையை தமிழகம் பெற்றது. 

Monday, January 24, 2011

நண்பேண்டா....

       ஆழ்ந்த சிந்தனையில் இருந்த என்னை, பழனியின் குரல், அவனை திரும்பி பார்க்க செய்தது. அவன் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே நின்றான். என்னை விட நான்கு வயது குறைவு. எதையாவது பேசுவான், சிரிப்பான் , அடிக்கடி வந்து ,’அண்ணே வணக்கம் ‘என சொல்லிவிட்டு ஓடிவிடுவான். அவனை பார்த்ததும் பேசாமல் நாமும் பழனி போல இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கத் தோன்றியது. என் அருகில் வந்தான் என் கையையே பார்த்தான். என் வலது கை மோதிரம் அவனை உருத்தியது. ‘அண்ணே அதைக் கொடுங்க பார்த்துட்டு தருகிறேன்’ என பல் இளித்துக் கேட்டான்.அவனை என்னால் திட்ட முடிய வில்லை. என் தனிமையை அவன் கலைத்திருந்தாலும், என் மனம் இன்னும் சரியாக வில்லை. ’பழனி அப்புறம் வா தருகிறேன்’ என்றேன். அவன் நகருவதாக இல்லை. ‘அண்ணே வணக்கம் .கொடுங்க” என மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டு என்னிடம் கேட்டான். என் உணர்வுகளை புரிந்து கொள்ளவே யில்லை...மீண்டும் இளித்தான். பின் என்னைப் பார்த்து ’ஐ லவ் யூ’ என சொல்லி விட்டு ஓடு விட்டான்.
      
 
      எங்கள் வீட்டிற்கு அருகே பார்க் உள்ளது. ஆண் , பெண் என அனைவரும் அங்கு தான் உலாவ வருவோம். அங்குள்ள இருக்கையில் நானும் , லதாவும் எப்போதும் அமர்ந்து எதாவது பேசிக் கொண்டு படித்துக் கொண்டு இருப்போம். இப்படித்தான் நானும் லதாவும் , அவளது தோழி உதயாவும் பேசிக் கொண்டு இருந்தோம். அப்போது எனக்கு பதினாறு இருக்கும் . பழனி வேகமாக வந்தான். லதாவைப் பார்த்து வணக்கம் சொன்னான். அவளுக்கு பழனி என்றாலே பிடிக்காது . ’ரவி அவனை பார்த்தாலே எரிச்சலா வருது.. தயவு செய்து போகச் சொல்லு “ என்றாள். நானும் அவனை சமாதனப்படுத்தி எதேதோப் பொருட்களைக் கொடுத்து போகச் செய்து தோற்றுப்போனேன். ”அண்ணோ , ஒண்ணும் வேணாம்ண்ணே.... வணக்கம் சொல்லச் சொல்லுங்க ”என்று அடம் பிடித்தான். அங்கு வந்த விசால் ’அந்த பிள்ளைக்கு தான் உன்னை பிடிக்காதுள்ள .. போடா ஓங்கி அறைவாங்கிட போற”என கையை ஓங்க ..” ஐ லவ் யூ ’ என சொல்லி லதாவைப் பார்த்து சிரிக்க தொடங்கினான். லதா ஓங்கி பழனியை அறைய , நான் தடுக்க , விசால் இது தான் சந்தர்ப்பம் என பழனியை அடிக்க முயல ,நான் பழனியை ஒரு வழியாக கடத்தி வீடு சேர்த்து வந்தேன். விசால் என்னை விட இரண்டு வயது மூத்தவன். அவனுக்கு லதா மீது ஒரு பார்வை . உதயாவின் தோழி ராம்யாவிற்கு விசால் மீது ஒரு காதல். எல்லாம் ஒரு பக்க காதல்.
    
         எனக்கு காதல் என்றாலே பயம் . அதுவும் அந்த வயதில் படித்து அதிக மார்க் வாங்கி எதாவது ஒரு அரசு உத்தியோகம் போக வேண்டும் என்று ஆசை. என் தந்தை ஆயிரம் மார்க் வாங்கிய என்னை பி.எஸ்.ஸி கணிதம் படிக்க செய்தார்.  
அப்போது தான் நான் வேலைக்கானத் தேர்வுகளில் அதிக மார்க் எடுத்து ஒரு அரசு வேலையில் சேர முடியும் என்பது அவரின் கனவு . இருந்தாலும் நானும் லதாவும் ஒன்றாம் கிளாசில் இருந்து சேர்ந்தே படித்து வந்தோம். இப்போது அவள் மருத்துவ படிப்பு படிக்கிறாள். விசாலும் மருத்துவம் தான், ரம்யாவும் , உதயாவும் இன்ஞினியரிங்க் படிக்கின்றனர். இருப்பினும் நாங்கள் நால்வரும் தினமும் மாலை ஆறு மணிக்கு பார்க்கிற்கு வந்து ஏழு மணி வரை அரட்டை அடித்து விட்டுத் தான் செல்வோம். லதாவும் நானும் பல மணி நேரம் பேசினாலும் எனக்கு அவள் நட்பு மீது அதிக நம்பிக்கை உண்டு. அவள் எது சொல்ல நினைத்தாலும் , அதனை நான் அவள் சொல்லும் முன் செய்து முடித்து இது தானே நீ என்னிடம் செய்ய சொல்ல நினைத்தாய் என்பேன் . அவள்,’நீ என்னோட மனச புரிஞ்சு நடக்கிறவன்டா...நீ தான் என் பெஸ்ட் பிரண்டு . “ என ,என் தலையை பிடித்து கோதி விடுவாள் . நான் இது வரை அவளிடம் வேறுவிதமான எந்த பால்வினைச் சம்பந்தமான உணர்வுகளையும் பெற்றது இல்லை.


       ” விசால், இது ஓவருடா.. ஒரு லூசப் போயி அடிக்க வரியே...” என கடிந்துக் கொண்டேன். உடனே, உதயா , “ஒரு பொண்ணப் பார்த்து ‘ஐ லவ் யு ‘ ன்னு சொல்லுறது எவ்வளவு முட்டாள் தனம் , லூசுன்னா எதை வேணாலும் செய்யலாமா...” என்றாள். “ சரி.. நான் உணர்ச்சி வசப் பட்டு இருக்க கூடாது ... என் மேலத் தான் தப்பு ... “என லதா மன்னிப்பு கேட்டாள். அதற்குள் ” எதுக்கு மன்னிப்பு கேட்கிற ...இதே இது ரவி ஒரு லூசா இருந்து உன்ன சொன்னா விட்டுறுவியா? “ என உதயா கோபமாக கேட்டாள்.  அதற்குள் முந்திக் கொண்டு விசால்,” இவன் மட்டும் சொன்னான் , மவளே நானே வெட்டிப் போட்டுறுவேன்” என்றான். அதற்குள் லதா,”இது ரவி மட்டும் சொல்லி இருந்தா.. நானும் சேர்ந்து ‘ஐ டூ லவ் யூ டா “ என சொல்லி இருப்பேன் “ என்றாள்.” ஏ, நிஜமாத்தான் சொல்லுறீயா ” என அழும் குரலில் விசால் கேட்க ,” இதுக்கு எதுக்குடா நீ பீல் பண்ணுற...” என சைடு கேப்பில் ரம்யா வண்டி ஓட்டினாள் . அன்றிலிருந்து அவள் என்னை தொடும் போது ஒருவித பயம் தொற்றிக் கொள்ளும். அதற்கு பின் ரம்யாவும் , விசாலும் தீவிரமாக காதலித்து இரண்டு வருடத்தில் ஓடிப் போய் கல்யாணம் செய்து கொண்டனர் என்பது தனிக் கதை.


      நான் இப்போது ஒரு வங்கியின் மேனேஜர். இன்னும் திருமணம் ஆகவில்லை. லதாவுக்கும் தான். இருப்பினும் ரம்யா, உதயா, அவர்களின் தோழிகள் கலா, ஜெயா, ராதா என நட்பு வட்டாரம் பெருகி விட்டது. அதே போல என் தோழர்கள், அலுவலக நண்பர்கள் என அருண், சாந்துரு, கர்ணன், ஆறுமுகம் என ஒரு பட்டாளம் தினமும் சேர்ந்து அரட்டை அடிக்க தொடங்கினோம், ஒரு நாள் அவள் இப்படி பேசிக் கொண்டிருக்கும் போது ,” ரவி நான் சொல்லுறதுக்கு முன்னாடியே   நான் நினைக்கிற எல்லாத்தையும் செய்து முடிக்கிற , ஆனா இன்னும் என்னை புரிஞ்சுக்க மாட்டிங்கிற..உண்மையாவே நான் சொல்லுகிறேன் ‘ஐ லவ் யூடா “ என்றாள். அவளை அந்த மாதிரி என்றும் நான் நினைத்துப் பார்த்தது இல்லை. இப்படி என்றாவது கூறி விடுவாளோ என்று பயந்து தான் அவள் தொடும் போது ஒதுங்கி விடுவேன். ”  இது எனக்கு அப்பவே தெரியும் ,  அவள் தொடுறதும் இவன் சிரிக்கிறதும், இவங்க லவ் பண்ணுறாங்கன்னு அப்பவே சொன்னேனே , நீ நம்பல “ என என் நட்பை கொச்சைப் படுத்தி பேசி விடக்கூடாது என கருதியே , அவள் என் தோல்மீது கை போடும் போதேல்லாம் தவிர்த்து, ஒதுங்கி வந்தேன்.


      ”என்ன ரவி, உனக்கு அவளை பிடிக்கலையா...? நீயும் அவளும் நல்ல பிரண்டு தானே...?அப்புறம் என்ன ..?”   எனக் கேட்டாள் ரம்யா.
” ரம்யா , நீயும் என்னை புரிஞ்சுக்கிற மாட்டீங்கிற ... அவளை எனக்கு பிடிக்கும் அவ என் பிரண்டு , அவளை வேறு மாதிரி எனக்கு பார்க்க தோணாது.அவ பிரண்டா இருந்து என் நல்லது, கெட்டது எல்லாம் பார்த்துக்கிறா... அதேப் போல அவளுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காதுன்னு எனக்கு தெரியும் .. புரியுதா...? ஏன் ஒரு ஆணும் பெண்ணும் நட்பா இருக்க கூடாதா.. ? அந்த நட்பும் ஒரு காதலாத் தான் முடியணுமா...?இதுனாலத் தான் ரோட்டில ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து பேசினாலே ஒரு லவ்வர்ஸ் என்று தான் நினைக்கிறாங்க...”

”டேய் , நீ நினைக்கிற மாதிரி இருக்கணும்ன்னா.... விஜயா தான் உன்னை க் கட்டிக்கணும் . அப்பத்தான் அவ நீ லதா கூட பேசும் போதெல்லாம் சந்தேகப்படாம இருப்பா...? லதா அருண கட்டிகிட்டாத்தான் அவ உன்னுடன் பேசும் போது சந்தேகப்பட மாட்டான்.”


“எனக்கு சம்மதம் ப்பா... என்ன ரவி வீட்டில மாப்பிளை பார்க்க வர சொல்லட்டா...?” எனக் கலாய்த்தாள் விஜயா.

“சரி , வரச் சொல் ... ஆனா லதாவுக்கு நீ எனக்கு பொறுத்தமானவளாம்ன்னு சொல்லட்டும் அப்புறம் கட்டிக்கிறேன்..”என்றேன்.

 “அப்ப உனக்கு கல்யாணமே நடக்காது.. இந்தா விஜயா புது வீடு கட்டினதுக்கு .. கேக் எடுத்துக்கங்க...” என ரம்யா கேக் நீட்ட ... அனைவரும் எடுத்தனர். லதா என்னை முறைத்துப் பார்க்க எனக்கு வயிறு சரியில்லை என சமாளித்தேன். அன்றிலிருந்து யார் எதை கொடுத்தாலும் சுதாரித்து தான் வாங்குவேன். நான் நட்பு வட்டாரத்தில் இருந்து ஓதுங்க ஆரம்பித்தேன். எதையாவது பேசி நானும் லதாவும் சண்டைப் போட்டுக் கொள்வதை தவிர்க்க ஆரம்பித்தேன். அவளும் கிளினிக்கில் பிசி என்பதைப்போல அனைவரிடமும் காட்டி , கூட்டம் சேருவதை தவர்த்து வந்தாள். தினமும் அவளிடம் செல் போன் உரையாடல் தொடர்ந்தது. ஆனாலும், அவள் என்னிடம் நட்பு ரீதியாக சண்டைப்போடுவாள். ”ஒரு கிளார்க் அவனைபோயி என்னுடன் ...அதப்பார்த்து நீ ஏன் சும்மா இருந்த ..எங்க அப்பா ... அம்மா மாப்பிள்ளை ப்பார்த்துக்கிருவாங்கன்னு சொல்ல வேண்டியது தானே...”என சண்டைக்கு வருவாள்.

”விஜயா இன்று என் வங்கிக்கு வந்தாள்” என்று சொன்னால் போதும் .. சண்டைக்கு வந்து விடுவாள். நானும் வாய் தவறி சொல்லி விடுவேன். அவளிடம் இருந்து எதையும் மறைக்கக்கூடாது என்ற எண்ணத்திலும் . பின்பு அவள் வந்ததை மறைத்தேன் என்று தெரிந்தால் வேதனைப்படுவாள் என நினைத்து எது நடந்தாலும் சொல்லி விடுவேன். ”என்ன ஈன்னு பல்லைக்காட்டி வேலை பார்த்து இருப்பீயே... நீ அன்னைக்கே சொன்னவன் தானே .. நான் சொன்னா கட்டிக்குவானாம்.. இப்ப சொல்லுறேன் கட்டிக்க.. “ என கடிந்து விடுவாள். மேலும் இரண்டு நாட்களுக்கு போன் பேச மாட்டாள்.


     இப்படித்தான் ஒரு நாள் கலா, ராமு, சந்துரு , லதாவும் நானும் சினிமா சென்றோம் . பின்பு உணவு சாலைக்கு சென்று உணவு அருந்தும் போது எதார்த்தமாக ” ரவி, நம்ம சந்துரு தங்கச்சி, உமா ரெம்ப நல்ல பொண்ணு , நம்ம லதா போலவே பழக பேச அருமையான பொண்ணு.. உனக்கும் வயசாகுது.. பேசாம கட்டிக்கவே....”என கலா வாயை திறக்க...

“லதா மாதிரின்னா நல்லது தான் பேசாம சந்துரு அப்பாகிட்ட போட்டோ ஜாதகம் கொடுட்து பேச சொல்லு ...” என்றேன். நான்கு நாட்கள் அவள் என்னுடன் பேசவேயில்லை. நட்பு வட்டாரத்திலும் பேசவேயில்லை.

பின்பு ஒரு வழியாக ஒரு தமாசுக்கு தான் சொன்னேன் என சாமாளித்தேன். அவள் நீ என் நண்பன் என்றால் என்னிடம் கேட்டு தானே பொண் பார்த்து இருக்க வேண்டும் என்று சொல்லி தன் நட்பு காரணமாக த் தான் சண்டைப்போட்டேன் என சப்பைக் கட்டுக் கட்டி பேசினாள்.

அப்போது தான் புரிந்தது . ஒரு பெண்ணுடன் நட்புக் கொள்ளும் கடினம்.அப்படி நட்புக்கொண்டபின் பிறருடன் பழகும் போது பார்த்து பழகவேண்டும் . அதுவும் ஒரு பெண்ணுடன் நட்பு க் கொண்டு , பிற பெண்ணுடன் பேசு வது என்பது மிகவும் கடினம்.அதனால் தான் ஆண்கள் பெண்களை நட்புக் கொள்ளும் போது காதலிக்கின்றனர். காதலி எந்த காதலனையும் சந்தேகிப்பது இல்லை. அதேப்போல எந்த ஒரு காதலனும் கணவனாவதை தவர்க்கிறான். ஏனெனில், காதலி மனைவியாக சந்தேகிக்கக்கூடாது என்று .


           பழனி என் ஆழ்ந்த சிந்தனையை களைத்து இருந்தான் . பேசாமல் நான் பழனியாயிருந்தால் சிறுவயது முதலே என்னை லதாவுக்கு பிடித்து இருக்காது . என்னால் அவள் யாருடனும் பேசாமல் இருந்து இருக்கவும் மாட்டாள். என்னுடனும் பேசுவதை தவிர்க்கிறாள். காரணம் கேட்டாள் உனக்கும் எனக்கும் சண்டை வரும் ..அப்புறம் நீ சமாதனம் படுத்துவாய் . சாரி . நீ உன் வழியை பார்த்து போ. நான் என் வழியை பார்த்து போகிறேன். அதையும் மீறி வழிய கிளினிக் சென்று பேசினால் , எனக்கு என் பேசண்டை பார்க்கவே நேரமில்லை என ஒதுக்கி பேசுவாள். இருப்பினும் அவளாள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்க முடியாது.


   இந்த முறை அவள் என்னை அழச் செய்து விட்டாள் . பேசாமல் நாம் டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு வேறு ஊருக்கு சென்றால் , அவள் அடிக்கடி சண்டை போடாமல் இருப்பாள். நாமும் தேவையில்லாமல் யாருடனும் வாயை கொடுத்து மாட்டிக் கொள்ளவேண்டிய அவசியமில்லை. அவளும் நம் நட்பு வட்டாரத்தில் சகஜமாக பழகுவாள். தன் வேலை டென்சனை குறைத்துக் கொள்வாள் என முடிவு செய்து போன் போட்டுக் கொண்டே இருந்தேன். அவள் எடுக்க வில்லை. எது அவள் போனுக்கு டயல் செய்வது இருநூறாவது தடவை. எந்த போனையும் அவள் அட்டண்டு செய்ய வில்லை.குறுஞ்செய்திகளையும் அள்ளித் தள்ளினேன். எந்த பதிலும் இல்லை.


     மறுநாள் , காலை என் வீட்டு வாசலில் அவளின் கார் வந்து நின்றது. அதிலிருந்து அவளின் தாய் , தந்தை , மற்றும் அவரின் தாய் மாமன் வந்திருந்தனர். அப்பா ஒரு வழியா அவள் தாய் மாமனை கட்டிக்க சம்மதம் கேட்க வருகிறாள் . இன்று முதல் என்னை தொந்தரவு செய்ய மாட்டாள். ஒரு பில்டிங்க் காண்ட்ராக்டர போய் கல்லயாணம் பண்ணச் செய்வதா? என என் மனம் உருத்தியது. அவன் அவளுக்கு பொறுத்தாமாகவேயில்லை.அவளை எதற்கும் சிந்தித்து முடிவெடு என கூறுவோம் என நினைத்து மாடி ஏறி உடுப்பு மாற்றிக் கொண்டு வர சென்றேன். எதற்கு இவள் நம்முடன் சண்டைப்போட்டால் என்பது தெரியாமல் பேசக்கூடாது எனவும் முடிவெடுத்து மாடியிலேயே அமர்ந்தேன்.



அவள் மாடி ஏறி வரும் ஓசைக் கேட்டது. அவளின் கொலு ஒலி என்னை சுதாரிக்கச் செய்தது. ’சரி , சரி புத்தகம் படிச்சது போதும் ... நான் என் ரவியை இழக்க விரும்பவில்லை. அதனால ஒரு முடிவெடுத்து வந்திருக்கேன். வா என் அப்பா , அம்மா உன்னிடம் பேசணுமாம் ”என்றாள்.  ”அது இருக்கட்டும் என்னுடன் ஏன் பேசவில்லை ?”
”உனக்கு தெரியாதா...?”
”அன்னைக்கு ஜெயா வீட்டு கிரகபிரவேசம் அன்னைக்கு நான் போகவில்லை .. அதனால உன்னை , என்னை , ரம்யா, அருண் , முரளீயை கூப்பிட்டு ட்ரீட் கொடுத்தா .. நான் தான் அனாசியமா யாரிடமும் உன்னை பத்தியும் , என் கல்யாணம் பத்தியும் பேச விடலையில்லை...”

”அது முக்கியமில்லை... நீ எனக்கு பிடிக்காதது சொஞ்ச..அதான் “என்றாள் லதா.

“தெரியல.. நீயே சொல்லு...”

“ அவகிட்ட இருந்து ... வீட்டில செஞ்சுகிட்டு வந்த கொழுக்கட்டையை ஏன் திண்ணே...? எனக்கு தான் அவ எதை தந்து நீ வாங்கினாலும் பிடிக்காதுலா.. அப்ப உனக்கு அவ மேல ஆசை இன்னும் இருக்கு ... அவ என்னை விட உனக்கு பெரிசா போயிட்டா..அதான் பேசல.போதுமா கீழே இறங்கி வா ”

”நான் உன்னை பார்த்தேன் .. நீ தான் பரவாயில்லை சாப்பிடு என்றாய். அதனால எடுத்தேன்...”

“ அப்ப நான் எது சொன்னாலும் செஞ்சுடுவியா.. எனக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சுதானே அன்னைக்கு செய்த .. அதான் பத்து நாளா பேசல..”

“நீ எல்லாம் எப்ப தான் திருந்தப்போறியோ........ சாப்பாட எடுத்தா ... அவகூடவே போயிடுவேனா.. என்ன ஒரு ராங்கி த்தனம் “ என சண்டை போட தொடங்க...
“டேய் ...ரவி. வா” என என் தந்தை அழைத்தார்.


‘இங்க பாருங்க ரவி, நான் ஒரு காண்ட்ராக்டர். என் மாமன் மகளை கட்டிக்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. இருந்தாலும் அவ ஆசை .. உங்கள் கட்டிக்கணும்ன்னு தான். .. வேறு யாரக்கட்டினாலும் அவ உங்க கூடப் பேசாம வாழ முடியாது .அதை எவனும் விரும்ப மாட்டான்.அவள் இந்த பத்து நாளும் எங்கேயும் போகல... வீட்டிலேயே அழுது புழம்பினா... நான் ரவியை ரெம்ப திட்டீட்டேன் ... கொடுமைப்படுத்துரேன்.. அவனும் நான் எது சொன்னாலும் கேட்டுட்டு , என்னை ஒரு அன்பா ஒரு நல்ல நட்பா பழகுறான். மாமா உங்கள கட்டிக்கிட்ட ரவியோட பேச விடுவீங்களான்னு கேட்டுக்கிட்டு அழுகிறா.. என்னைப்பொருத்தவர அவளை புரிஞ்சுகிட்ட நீங்களே அவள் கட்டிகிட்ட அவ வாழ்க்கை நல்லா இருக்கும் .. நீங்க அவள யாரும் தப்பா நினைக்ககூடாதுன்னு அவ நட்பை பாராட்டினதுக்கு எங்க எல்லாரோட சம்மதத்துடன் எங்க லதாவ உங்க மனைவியா எத்துக்கணும்..” என்றார்.


“ தப்பா நினைக்காதீங்க ... எந்த ஆம்பிளையும் தன் மனைவி இன்னொரு ஆணுடன் பழகுவதை ஒத்துக் கொள்வது இல்லை. .. அதனால நான் லதாவக் கட்டிகிட்டாலும் , அவள உங்களோட பேச அனுமதிக்க முடியாது . லதா மனைவியா எத்துக்க உங்க நட்பு இடம் கொடுக்கலைன்னா... இனி எப்பவுமே மறந்திடுங்க... அவள் எப்படி போனாலும் உங்களூக்கு கவலையில்லைன்னா... வேணாம்ம்ன்னு சொல்லுங்க”


லதாவின் கண்ணீர் என் கண்ணை கலங்கச் செய்தது.  ஒரு ஆண் , பெண்ணின் நட்பு காதலாகத்தான் இருக்க கூடாது. அதுவே கல்யாணமாக முடியும் என்றால்  மிகவும் மகிழ்ச்சியாத் தானே இருக்கும். ஆம்.. இப்போதேல்லாம் நான் யாருடன் பேசினாலும் லதா சண்டைப்போடுவதே யில்லை.
சொல்ல மறந்திட்டேன்.. பிப்ரவரி பதிநான்கு கல்யாணம் எல்லாரும் வந்திடுங்க... 

Saturday, January 22, 2011

எஸ்.ராவின் ஒசில் பூனையும் சாருவின் தேகமும்

   எனக்கு விலங்குகளைக் கண்டாலே பயம் . சிறுவனாக இருக்கும் போது ஒடி பிடித்து மறைந்து விளையாடும் போது , முருகன் காம்பவுண்டு வாசல் கதவை தெரியாமல் திறந்து மறைவதற்கு ஓட, எப்போதும் சாதுவாக இருக்கும் ஜிம்மி ,கதவைத் தொட்டவுடன் தாவி சட்டையை பிடிக்க , அன்று அரண்டவன் தான், இன்று வரை நாய், பூனை , பறவை என எதைக்கண்டாலும் பயம் . என்ன பறவையையுமா? என கேட்டால் அதற்கும் ஒரு கதை இருக்கிறது.
      
           பால்பாண்டி வீட்டில் கோழி வளர்ப்பார்கள். அவனை பார்க்க சொல்லும் போதெல்லாம் கோழிக்கு இரை மற்றும் தண்ணீர் வைத்துக் கொண்டு இருப்பான். எனக்கு கிரிக்கெட் விளையாட போக வேண்டிய அவசரம் என்பதால் , அவனை உடனே கையுடன் அழைத்து சென்று விடுவேன். அவனுக்கு சேவல் சண்டை செய்வது பிடிக்கும் . ஆடுகளம் படம் பார்க்கும் போது அவன் ஞாபகம் வந்தது. அன்று வீட்டிற்கு வீடு எதாவது ஒரு செல்லப்பிராணி வளர்ப்பது வழக்கமாக இருந்தது.

     எதிர் வீட்டு ரேகா வீட்டில் பூனை வளர்ப்பார்கள் . அது என்னை பார்க்கும் போதெல்லாம் ஜிம்மி கடித்தது ஞாபகத்தில் வர , பூனை அருகில் வந்தாலே பயப்படுவேன். ”சரோ , பாண்டி ஒண்ணும் கடிக்க மாட்டான்” என ரேகா சொல்லும் போதெல்லாம் அவளை கடிந்து விழுவேன். ”ஆமா, அது என்னை கடிக்கிற மாதிரியே இருக்கு..ஊசி போட்டவனுக்கு தான் தெரியும் எது கடிக்கும் எது கடிக்காதுன்னு...அது தூக்கிட்டு ஓடு போயிடு .. இல்ல கல்ல விட்டு எறிஞ்சுப்பிடுவேன்...” என நான் கத்தும் போது , ரேகா ,”டோய், இது கடிக்காதுடா... பயப்படாத ..”என சொல்லிக் கொண்டு என் அருகில் வருவாள் . நான் அலறி அடித்து ஓடுப்போவேன். அவளுக்கு சிரிப்பாக இருக்கும். “அடியே.. உன்னை நாய் வளர்க்கிறவன் வீட்டிலக் கட்டிக் கொடுத்து உன் பூனையை சாவடிக்கல... என் பெயரை மாத்திக்கிறேன் ..” என்று நான் சபித்தது போலவே ஒரு அல்சேசன் நாய் வளர்க்கும் வீட்டில் தான் கட்டிக் கொடுத்தார்கள். ஆனால் அவளிடம் பூனை இல்லை. அது நேய்வாய்ப்பட்டு இரண்டு வருடங்களில் இறந்து இருந்தது.

      
      ஒருநாள் பால் பாண்டியைப் பார்க்க வீட்டிற்கு சென்றேன். அவன் வீட்டில் இல்லை. அவனின் தாய் பார்வதி , ”பாண்டி, கடைக்கு சென்றிருக்கிறான் .திண்ணையில் இரு வந்திருவான்” என சொல்ல ,திண்ணையில் அமர்ந்து கோழிகளை வேடிக்கை பார்க்க தொடங்கினேன். கோழி குஞ்சுகள் மட்டும் திண்ணைக்கு அருகில் சிதறிக் கிடந்த அரிசிகளை பொறுக்கி திண்ண, பெரிய கோழியைக் காணாமே என தேடினேன். எனக்கு வெகு அருகில் கொக் , கொக் என ஒலி வர , கூர்ந்து கவனித்தேன். அருகில் உள்ள கூடைக்குள் கோழி இருந்தது தெரிந்ததும் , கூடையை எடுத்தது தான் தாமதம் , அது பறந்து வந்து என்னை கொத்தியது. அன்றிலிருந்து இந்த வளர்ப்பு பிராணிகளைக் கண்டாலே பிடிப்பதில்லை.


         இன்று முப்பத்தெட்டு வயதாகிறது . இன்றும் எனக்கு விலங்குகளிடம் நட்பு கொள்ள முடியவில்லை. என் மகள் லீலா நாய் வளர்க்க ஆசைப்பட்டு என்னிடம் கேட்க ,”வீட்டில மிருகமெல்லாம் வளர்க்கக்கூடாது, வியாதிவரும். அத கவனிக்கவே நேரம் போதாது, அப்புறம் படிப்பு கெட்டுப்போகும் ..உனக்கு வேணும்மின்னா ஒரு நாய் பொம்மை வாங்கித்தருகிறேன் .”என்றேன். ”பொம்மை நாய்க்கு என்ன சோறு வைக்க முடியுமா..? அது என்ன குரைக்குமா...? யாரும் வந்த எச்சரிக்குமா...? நீ ஒரு சரியான பயந்தாங்கோலி ..” என கேலி செய்வாள்.


    எஸ். ராவின் எழுத்துக்களில் ஒசில் பூனை, புலனி பறவை,ஜப்பானிய தவளை வந்து பேசுகின்றன. இவர் எப்படி நட்புக் கொண்டு போசுகிறார்?. இவரும் என்னைப் போல பாதிக்கப்பட்டு , புனைவுகளிலாவது இவைகளுடன் நட்புக் கொள்வோம் என முடிவெடுத்து , இப்படி புனைவுகளில் போசுகிறாரோ !என்ற ஐயமும் உண்டு. இப்படி சிந்தனைகளில் முழ்கி இருந்த போது , என் தோழியிடம் இருந்து ஒரு குறுந்செய்தி வந்தது. ”சுந்தர் ராம சாமியின் ,’ஒரு புளியமரத்தின் கதை படித்து விட்டேன் ‘ சாருவின்,’ தேகம்’ கொண்டு வா” என்று வந்தது. சாருவின் தேகம் வலைகளின் மூலம் மோகம் எற்படுத்தியதன் விளைவு ’,என்னை உடனே கொண்டு வா ’என்றாள்.


     நானும் சாருவின் தேகத்தை தூக்கிக் கொண்டு பயணிக்கத் தொடங்கினேன். அப்போது கா. பா சொன்னது நினைவுக்கு வர சிரித்தேன். சாரு ஒரு வெகு ஜன எழுத்தாளன் என்றதும் , அவருக்கு வந்த கோபம் எனக்கு மீண்டும் சிரிப்பு மூட்டியது.  சி.டி. டான் பைக் நாற்பது மைல் வேகத்தில் சாருவின் தேகத்தையும் என்னுடன் சுமந்தது. ”சரவணா அண்ணே, நீங்க நிறைய படிக்கணும்ன்னே , ஜிரோ டிகிரி, இப்படி ஒருசிலதை மட்டும் வாசிச்சுகிட்டு ,விகடன்ல வரத வச்சுகிட்டு எதையாவது சொல்லக்கூடாது .அவனை பற்றியே சுய புராணம் பாடிகிட்டு இருக்கிறது ஒரு எழுத்தா...?” .”எது எப்படியோ எங்கெல்லாம் இலக்கிய சர்ச்சை எழுகிறதோ அங்கெல்லாம் சாரு வந்து போகிறார் அல்லவா, அந்தமாட்டில் அவர் ஒரு வெற்றி கரமான எழுத்தாளன் தான்...”என்ற நேசனை முறைத்தார். ”கமர்சியல எழுதுகிறதெல்லாம் ஒரு எழுத்தா..”என்ற கா. பா வின் அனல் போச்சை நினைத்துக் கொண்டு வர , என் தோழியின் வீடு வந்தது.


        வீடு மாடி என்பதால் மெதுவாக ஏறினேன்.வீடு வந்த அவசரத்தில் சாருவின் தேகத்தை பைக்கிலே வைத்து விட்டு மாடி ஏறிவிட்டேன். என் பைக் சத்தம் கேட்டு , என் தோழியின் பெண் குழந்தை ,”அங்கிள் , சத்தம் போடாமல் மெதுவா வாங்க ”என்றாள்.  ”பைக்கில புத்தகம் வச்சுட்டேன் ..எடுத்துட்டு வந்திரேன்..”என்ற என்னை , ஒரு விரலை வாயில் வைத்து , “ஸ்ஸ்ஸ்... அப்புறம் எடுத்துக்கலாம் ..வாங்க” என அழைத்தாள். மெதுவாக கதவை திறந்தாள். உள்ளே சென்ற எனக்கு ஆச்சரியம்.

      அங்கு என் தோழி சமையல் அறை அருகில் தனியாக பேசிக் கொண்டு இருந்தாள். ”என்னடா.. . திருட வந்திருக்கியா..?” .”என்னடா, பேச மாட்டீங்கிற...நேத்தே உன்னை சொல்லி இருக்கேன்ல .. உனக்கு பால் வேணுமின்னா ... என் கிட்ட வந்து கேட்கணும்ன்னு...?” அதற்கும் எதுவும் உள்ளே பதிலைக் காணாம். பவானி என்னிடம் ,”அம்மா, ஒரு கால் மணி நேரமா இப்படி தான் பேசிகிட்டு இருக்காங்க..அங்கிள்’’என்றாள். ’ உள்ள யாருல இருக்கா...?”. ”அந்த கூத்த நீங்களே பாருங்க... ” என சொல்லி, மெதுவாக அழைத்துச் சென்றாள்.அங்கு என் தோழியின் மிக அருகில் ஒரு பூனை இருந்தது. நான் இதுவரை அவர் வீட்டில் இந்த பூனையை பார்த்ததே இல்லை. “என்னல.. பூனை வளர்க்கிறியா .?”என்றேன் . “சரி, என் பிரண்டு வந்திட்டான்... நீ போ ”என்றாள். அப்போது தான் அது மியாவ் என்றது. அவள் பூனையுடன் பேசியதை பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்தது. ”என்ன பால் வேணுமா.. ? இனிமே என்கிட்ட வந்து பால் வேண்ம்ன்னு கேட்டாத்தான் நான் பால் தருவனாம்.புரியுதா...?(என கூறீக் கொண்டே கிண்ணத்தில் பால் வைத்தாள்) நீ எஸ்.ரா வின் ஒசில் மாதிரி நம்ம ஏரியா லைப்பிரரி போயி படிச்சுகிட்டு வந்து கதை சொல்லுவியாம்.”என்றாள்.அதுவும் வாலை தூக்கி கொண்டு வந்து மியாவ் என்று சொல்லிக் குடித்தது.

       ”என்ன இது புதுசா..? புத்தகம் படிச்சு கெட்டு போயிட்ட...”    
“நானும் சொல்லணும் சொல்லனும்ன்னு இருந்தேன் மறந்திட்டேன்.. இது மூணு நாள எங்க வீட்டு க்கு வருது. இரண்டாவது நாள் எதொ என் அருகில் வந்து பேசுவது போல இருந்தது. முதலில் என்னை ப் பார்த்ததும் சற்று பின் நோக்கி சென்றது . ஆனால் , என்ன வேண்டும் ? நீ யார் ?என நான் கேட்டதும் இது நின்னு என்னை பார்க்கும் அதுக்கு பதி ல் சொல்லுகிறமாதிரி ஒரு சவுண்டு கொடுக்கும் யாராவது வந்தால் தெரியாமல் மெதுவாக சென்று விடும். ரெம்ப நேரமா பேசிகிட்டு இருக்கேன். ”

“இது உனக்கு ஓவரா தெரியல...? தேகம் கொண்டு வந்திட்டேன் . ஆனா கீழே பைக்கில இருக்கு .. போகும் போது எடுத்து தரேன்”என்றேன்.

“சரவணா , பிளீஸ்..எனக்கு சாருவும் வேணாம் , ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம்... நான் பூனையுடன் பேச வேண்டும் ... நாளைக்கு காலையில கொடு.. பிளீஸ் நாளைக்கு வா... நான் பூனைக்கிட்ட நிறைய பேசணும்...” என சொல்லிக் கொண்டே கிச்சனில் பூனையுடன் பேச தொடங்கினாள்.


  நான் வரும் போது எப்படி சாருவின் தேகத்தை பைக்கில் வைத்து கொண்டு வந்தேனோ அது போலவே , திரும்பினேன். இம்முறை திரும்புகையில் எஸ்.ராவின் ஒசில் பூனை யும் என்னுடன் வந்தது. என் தோழி எப்படி பூனையுடன் பேச ஆசைப்படுகிறாள் . இப்படி தான் எஸ்.ரா. பேசுகிறாரோ ..?என்ற ஐயப்பாட்டுடன் வீடு வந்து சேர்ந்தேன்.

Friday, January 21, 2011

பள்ளியில் பொம்மலாட்டம்


   ஜனவரி பன்னிரெண்டு காலை பத்து மணிக்கு எங்கள் பள்ளியில் நான்கு பெரும் விழாக்கள் கொண்டாடப்பட்டன. பொங்கல் விழா, தேசிய இளைஞர் தினம், பொம்மலாட்ட கலை நிகழ்ச்சி மற்றும் இலவச சீருடை வழங்கும் விழா என ஒரு மிகப்பெரிய கொண்டாட்டம் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.காலை எட்டு மணிக்கே ஆசிரியர்கள் ஒன்று கூடி மூத்த ஆசிரியர்களான ஓம்சக்தி மற்றும் இந்திரா ஆகியோருடன் இணைந்து கோலம் போடத் துவங்கினர். எட்டு முப்பதுக்கு எல்லாம் கோலத்தால் பள்ளி விழாக் கோலம் பூண்டது.


ஒருபுறம் பெண் ஆசிரியர்கள் கோலம் போட்டு அசத்த , நானும் எங்கள் உறவின் முறை சார்ந்த பூசாரி , மற்றும் செயர்குழு உறுப்பினர் செல்வம் இணைந்து பொங்கல் கிண்ட ஆரம்பித்தோம். நானும் இணைந்து கொண்டேன். பொங்கல் கிண்ட எங்களுக்கும் தெரியும் என போட்டோ எடுத்தும் கொண்டேன்.வரலாறு முக்கியம்மில்ல என மாணவர் கமண்டும் தூள் பறத்தியது. பின் ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு மெகா கோலம் போடத்துவங்கினர். மாணவர்கள் ஆசிரியர்கள் தங்களுக்காக பொங்கல் விழா கொண்டாட உழைப்பதைப் பார்த்து , தங்களுக்குரிய பொம்மலாட்டம் கலை நிகழ்ச்சிக்கு ஆவலாகத் தயாரானார்கள்.




மணி பத்து ஆனதும் எங்களின் உறவின் முறை துணைத்தலைவர் திரு ரத்தினம் , மற்றும் பள்ளியின் பொருளாளர் திரு பாஸ்கரன் ஆகியோர் வருகை தந்து எங்களை மிகவும் உற்சாகப்படுத்தினர். பள்ளித்தலைவர் திரு எஸ். சொளந்திரப்பாண்டியன் அவர்களும் பள்ளிச் செயலர் திரு பி.சொளந்திரப்பாண்டியன் அவர்களும் கலந்துக் கொண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை சரிப்பார்த்தனர். 




விழா ஆரம்பிக்க அனைத்து மாணவர்களையும் வரிசையாக மைதானத்திற்கு வர செய்தார்கள் ஆசிரியர்கள். பொங்கல் விழாவின் இன்பம் மாணவர்கள் முகத்தில் பொங்கி வழிந்தது. மதுரை தென் சரகத்தின் வட்டாரவள மைய மேற்பார்வையாளர் பொம்மலாட்ட நிகழ்ச்சி துவங்கி வைத்து வாழ்த்து சொல்ல வருகைப்புரிய விழா மேலும் உச்சக்கட்டத்தை அடைந்தது.  எங்களின் சிறப்பு அழைப்பாளர் கீழச்சந்தைப்போட்டை சித்தா மருத்துவர் அம்மா நசுருத்தீன் அவர்களும் வருகைப்புரிய விழா இறைவணக்கத்துடன் ஆரம்பம் ஆனது. 




விழாவிற்கு பள்ளித்தலைவர் திரு எஸ். சொள்ந்திரப்பாண்டியன் அவர்கள் தலைமை தாங்க, பள்ளிச்செயலர் திரு பி,சொளந்திரப்பாண்டியன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.பின்பு பள்ளியின் பொருளாளர் திரு டேனியல் அவர்கள் குழந்தைகளுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். பொங்கல் இனிப்பு போல ஆசிரியர்களின் கற்பிப்பு முறை இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மாணவர்கள் தாய், தந்தை, ஆசிரியர்களுக்குத் தரும் பொங்கல் , நல்ல கல்வி பயிலுதலும், ஒழுக்க நெறியுடன் வாழ்தலும் எனக் கேட்டுக் கொண்டார். ( டேனியல் அவர்கள் பள்ளி வளர்ச்சிக்கு என்றும் பாடுபடும் தீவிர நபர். பள்ளி வளாகத் தூய்மை, துப்பரவு பணியாளர்களை மேற்பார்வையிடல், வகுப்பறையில் பல்பு , பேன் , சுவிட்ச், பெஞ்சு ஆகியவை புதிதாக வாங்கி தருதல் என உடனடியாக செய்து தருபவர்)




பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் அவர்கள் துவக்கி வைத்தார். மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துக்கொண்டனர்.
மரப்பாச்சி பொம்மைகளை வைத்து விதவிதமாக கதை சொல்ல ஆரம்பித்தனர். மாணவர்களின் பொது சுகாதாரம், காயகறிகளை உண்ண வேண்டும் , பொது இடங்களை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என்று அசத்தினர். பின் திரைக்கு பின்னால் இருந்து பொம்மைகளை வைத்து நீதிக்கதைகள் , நிஜக்கதைகள், பாடக் கதைகள் என நிழல் உருவங்களை வைத்து கதை சொல்லி கலை கட்ட வைத்தனர். நேரம் போனதே தெரியவில்லை.



 நிகழ்ச்சிகளைப்பார்த்தப்பின் பேசிய வட்டார வள மைய மேற்பார்வையாளர் இப்பள்ளி செயல் வழிக் கற்றல் செயல்பாடுகளை நன்முறையில் செயல் படுத்துகிறது . இது போல அனைத்துப்பள்ளி செயல் பாடும் அமையுமானால் மதுரை மாவட்டத்தில் தென்சரகம் ஒரு முன்மாதிரியாக செயல் படும் என்று கூறினார். ஆசிரியர்கள் நல்ல முறையில் பயிற்சி அளித்துள்ளனர்.மாணவர்கள் மூத்தோர் சொல் படி கேட்டு நடந்தால் முன்னேறலாம் என்றார். கதைகூறி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
   அடுத்ததாக மருத்துவர் அம்மா அவர்களால் ஆசிரியர்கள் சார்பில் எடுக்கப்பட்ட சீருடைகள் பொங்கலுக்கு இலவசமாக வழங்கப்பட்டது . பதினாறு மாணவர்கள் பயனடைந்தனர். மருத்துவர் அம்மா பள்ளியின் செயல் பாடுகள் என்னை மாணவ பருவத்திற்கு அழைத்துச் சென்றது . இது மாதிரி பள்ளிகள் தான் சிறந்த குடிமகனை உருவாக்கும் எனக்கூறி பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மதியம் இரண்டு மணிவரை எங்களுடனே இருந்தார்.


       பின்பு என் முறை வரவே தேசிய இளைஞர் தினமான சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் பற்றிய கருத்துக்களை என் சகோதர , சகோதரிகளான மாணவச் செல்வங்களுடன் பகிர்ந்துக் கொண்டேன்.
 விழாமுடிவில் ஆசிரியர் திருமதி ஓம் சக்தி நன்றி கூற விழா இனிதே முடிந்தது. பன்னிரெண்டு ஐம்பது ஆகியது.அனைவருக்கும் பொங்கல் இனிப்பு வழங்கப்பட்டது. பின் மதிய உணவு அருந்த சென்றனர். 

Thursday, January 20, 2011

நேசனுடன் ஒரு ஜல்லிக்கட்டு ...!

 நேசனுடன் ஞாயிறு மிகவும் பயனுள்ள இலக்கிய சந்திப்பாக இருந்தது. நேசன் மிகவும் மாறியுள்ளார். முதுமையல்ல , அது இலக்கிய முதிர்ச்சி. என்னைப்போன்ற வாசகனையும் திரும்பி பார்க்க செய்துள்ளது அவரின் புத்தக வெளியீடு. அவரின் புத்துணர்ச்சி இன்றும் குறையவில்லை. வார்த்தைகள் அவரைத் தேடி வந்து விழுகின்றன. வார்த்தைகளும் அவரின் கவிதைமூலம் மகுடம் சூடிக்கொள்கின்றன. தமிழ் அவரிடம் விளையாடுகிறது என்பதை விட வாசம் செய்கிறது என்பதே சரியானது. கோணங்கியுடன் அவரின் நட்பு மிகவும் வியப்பளிக்க வைக்கிறது. அவரின் பேச்சு என்னை கோணங்கியை வாழ்வில் ஒருமுறையாவது சந்தித்து விடவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. கோணங்கி தமிழ் எழுத்துலகத்திற்கு மிகவும் கடினமான வாசிப்பு கொடுத்துள்ளதால், அவரின் புத்தகத்தினை வாசிக்க இன்னும் வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும் என்பார் கா.பா.




நேசன் என்னைப்போன்ற புரியாத , எளிய வாசகனையும் தன் எழுத்துக்கள் போய் சேர வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறார். தமிழ் எழுத்துலகம் பாலியல் சார்ந்த தன் எழுத்து முறையினை அல்லது பார்வையினை இன்னும் கூர்மைப்படுத்த வேண்டும் என்று கூறுகிறார். ஒரு பெண்ணை அவளின் உடல் சார்ந்த துன்பங்களைப்போசும் போது , பால் சார்ந்தவை மட்டுமே பேசப்படுகிறது என ஆதங்கப்படுகிறார். ஏன் மேனோபாஸ் சார்ந்த அவளின் உணர்வுகளைப் பதியவில்லை என சொல்லி , நம்மை இது சார்ந்து எழுத தூண்டுகிறார்.



  கரைக்குடி சந்துரு , அழகுபாண்டி ஆகியோர் நேசனுடன் சரிக்கு சரியான இலக்கிய விவாதங்களை முன் வைக்கின்றனர். அவர்கள் புத்தகங்களை அடுக்கி , கதைகளை ஒப்புமைப்படுத்தி , அதில் உள்ள பாத்திரங்களை அலசி , அதில் இதனை சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என அலசி ஆராயும் அழகு , பால மேடு ஜல்லிக்கட்டை விட படு பயங்கரமாக இருந்தது.

      எழுத்தாளர் திரிசந்தழகுவுடன் அவரின் விவாதம் நமக்கு படைப்பின் மீது தாகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. அவர்கள் சுஜாதா, எஸ்.ரா., சாரு , கோணாங்கி ,வண்ண தாசன், ஜெயமோகன் , ஜெயகாந்தன் என பலரின் படைப்புகளை பத்தி பத்தியாக அலசினர். அதனாலே ’நான் இப்போது ஒரு பத்தி எழுத்தாளனைப்போல எழுத ஒரு விசயம் கிடைத்தது ,அதனை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.


       பாலமேடு செல்லும் வழியின் இயற்கை அழகு நேசனை கவர்ந்து இருக்கும் என நினைத்து இருந்தேன். அதற்கும் ஒரு கவிதை படைத்தார். மொட்டைத் தென்னை மரம் , தலையிழந்த மானுடனாக எனக்குப் பட்டாலும் அவரின் பார்வை வித்தியாசமாகவே இருந்தது. தன் பயணத்தை அவர் தன் பிளாக்கில் சொல்லுவார் அப்போது அதனை சுவைப்பட ரசிப்போம். பப்பாளியை நறுக்கி , அதில் உப்பு தூள், மிளகாய் தூள் தூவி சுவைக்கூட்டுவதுப்போல , நமக்கு அவரின் பேச்சில் உவமை,உவமானங்களைத்தூவி அனைவரையும் கவருகிறார்.




  மாலையில் இகோ பார்க்கில் சந்திப்பு , இருப்பதை நினைவு படுத்தவே , அனைவரும் , திரிச்சந்தழகு வீட்டில் மதியம் உணவு அருந்தி விட்டு , கிளம்பினோம். மாலை சந்திப்பின் முக்கியத்துவம் கருதி கா.பா அன்று மிகவும் மவுனமாகவே இருந்தார். எஸ்.ரா. பற்றி விமர்சனங்களின் போதும் அவர் அமைதியாக இருந்தார். ஒரு எழுத்தாளன் எப்போது நீர்த்துப்போவான்...? என்ற கேள்வியுடன் நேசன் அனைவரையும் மடக்க... இலக்கிய பேச்சு நீண்டது. பால மேடு இலக்கிய பேச்சு எங்களை மாடு பிடிப்பதைவிட கஷ்டமான வினாவை கேட்டு முட்டித்தள்ளியது.  

     அடுத்த இடுகையில் நேசன் சொன்னதை சொல்லுகிறேன் . தங்களும் பதில் சொல்லுங்களேன்... !  

பெங்களூர் தந்த தந்தை...





"செய்யாத தவறுக்காக தண்டனை அனுபவிக்கிறோம் வயோதிகம் என்ற பெயரில்"
என்ற வரிகளை இதயத்தில் தாங்கினாலும் , என்னிடம் இருந்து இளமை இன்னும் குறைய வில்லை என்று எனக்கு சவாலாக பெங்களூரில் என்னைத் தேடி ஜனவரி மூன்றாம் தேதி காலை பதினோரு மணிக்கு ஆர். ஐ.இ. வாசலில் காத்திருந்து, எனக்கு போன் செய்து ,என்னை அழைத்து சந்திக்க வந்த அந்த பிளாக்கர் யாராக இருக்கும் என நீங்கள் யூகிக்கும் இந்த வேலையில் , என்னை அசரவைத்தவர் எழுபத்து இரண்டு வயதேயான இளைஞர் திரு ஜி.எம்.பால சுப்பிரமணியன் ஆவார்கள். அவர் இருப்பிடம் நான் தங்கியிருந்த பெங்களூர் யுனிவர் சிட்டியில் இருந்து வந்து சேர இரண்டு மணி நேரம் ஆகும்.

      தன் பேரன் ஆரம்பித்து கொடுத்தான் பிளாக் . எனக்கு முதலில் கமண்டு போட்டவர் உங்கள் மதுரைக்காரர் சீனா என பெருமையாக சொன்னார். பேரனிடம் இருந்து கற்றுக் கொள்வதில் தவறில்லை என அவருக்கு கமண்டு போட்ட சீன அய்யாவிற்கு போன் போட்டேன் , போன் எடுக்க வில்லை. பின் மலை போனில் கிடைத்தார். சென்னையிலிருந்து வைகை மூலம் வருவதாக சொன்னார். இரவு ஜி.எம்.பி.உடன் அதாங்க நம்ம நாயகனுடன் பேசினார்.

      தலை முடி தான் நரைத்துள்ளது , அவரின் இளமையும் துடுக்கான பேச்சும் அப்படியே பதினெட்டு வயது வாலிபனைப் (தருமி) போல இன்றும் இருக்கிறது. ஏதோ பக்கத்து வீட்டு நண்பனைப் போல பேசினார். உங்கள் எழுத்தும் , உங்களுக்கு ஆசிரியர் பணியில் இருக்கும் ஈடுப்பாடுமே என்னை உங்களிடம் ஈர்த்து வந்தது என அறிமுகப்படுத்திக் கொண்டார். இருவரும் நேரில் சந்திப்பது இதுவே முதல்முறை. இருப்பினும் நீண்ட நாள் நண்பர்கள் போல பழகினோம். சக ஆசிரியர்கள் என்னையும் , அவரையும் ஆச்சரியமாகப் பார்த்தனர். இவனை பார்க்க இவ்வளவு பெரியவரா என்று அசந்து பார்த்தனர். இணையம் இணைத்த நட்பு எனக்கு புதிய தந்தையையும் , அவருக்கு ஒரு இளைய மகனையும் தந்துள்ளது.


      ஆர்.ஐ.இ யில் இருவரும் உணவு அருந்தினோம். மிகவும் மகிழ்ந்தார். தனக்காக காத்திருக்கும் தன் மனைவிக்கு போன் செய்து , எனக்காக காத்திருக்க வேண்டாம். நான் இங்கு உணவு அருந்திவிட்டேன் , நீ சாப்பிடவும் என சொல்லி , இன்று நம் வீட்டிற்கு புதிய விருந்தினர் வருவார் என என்னை அன்பால் தன்னுடன் வரவேண்டும் என உணர்த்தினார்.

     ஆர்.ஐ.இ. மூத்த பேராசிரியர் வெங்கடேசன் அவர்களிடம் என் இனிய நண்பரை பற்றி அறிமுகம் செயதேன். அவர் ஆச்சரியத்துடன் இருவருக்கும் இது தான் முதல் சந்திப்பா என கேட்டு உளம் மகிழ்ச்சிக் கொண்டார்.எனக்கு மதியம் அவரை சந்திக்க , அவரின் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கொடுத்தார்.

    இருவரும் அவரின் இல்லம் நோக்கி பயணித்தோம். அவர் ரோட்டை ஓடியே கடந்தார். எனக்கு தான் முதுமை தொற்றியுள்ளது என்பதை உணர்ந்தேன். காரைக் குடி மதுரை தொலைவு உள்ள இடம் அவ்ரின் வீடு. இனிமையாக பேசிக்கொண்டே வந்தார். உங்களின் எழுத்து, புகைப்படம் ஆகியவை நீங்கள் வயதானவர் என்று நினைக்க வைத்தது .ஆனால் இவ்வளவு இளமையாக இருப்பீர்கள் என்று நினைக்கவில்லை, என இளைய மகனை விட இளமையாக உள்ளீர்கள் என ஆச்சரியப்பட்டார். தன் எழுத்து , தன் ஆதங்கம் , தன் பயணம், தான் வந்த பாதை என அத்தனையையும் இனிமையாக எடுத்து சொன்னார். அவரின் வீட்டுக்கு பேருந்தில் பயணிக்கும் போது எனக்கு அவரின் மீது பொறாமையை ஏற்படுத்தியது. இந்த வயதில் நாம் இப்படி முகம் தெரியாத ஒருவரை தேடி செல்வோமா என்பது சாத்தியமே இல்லை.
                                                                 

வீட்டில் அவரின் மனைவி அவரை விட எளிமை , தன் சிரித்த முகத்துடன் என்னை வரவேற்றார்.இருவரும் எதோ ஒரு பதினெட்டு வயது வாலிபர்கள் போல உரையாடிக்கொண்டனர். வயது அதிகம் ஆகும் போது அன்பும் அதிகமாகும் என்பதனை நான் பார்த்தேன். தனியாக பஸ் ஏற்றி விட்டேனே எப்படி சென்று திரும்பினாய் என இவர் அவரின் மீது அன்பு பொழிய, அவர் நான் நீங்கள் சாப்பிட்டீங்களோ இல்லீயோ என பயந்தேன் ... இடம் கண்டுபிடித்து இவரை பார்த்துவிட்டு வருவீங்களோ இல்லையோ ...பாவம் அவ்வளவு தூரம் போய் வீணாகி விடக்கூடாது என பயந்தேன் என இருவரும் பகிர்ந்து கொண்டவிதம் என்னை என் மனைவியை ஒரு கணம் நினைக்கத் தூண்டியது.இதுவரை நான் அவளை இப்படி அணுசரனையாக எதையும் கேட்டதில்லையே... என்று குற்றப்படுத்தி பார்க்கச் செய்தது.இவர்கள் தான் இப்படி என்றால் அவரின் மகன் அவருக்கு போன் செய்து ந்ல்லப்படியா அவரை பார்த்துவிட்டு வந்தீர்களா என விசாரித்தார். இது மேலும் அவரின் குடும்பத்தின் மீது ஒரு பிடிப்பை ஏற்படுத்தியது. நாமாக இருந்தால் , ”சாப்பிட்டையா ஏதோ கம்ப்பியூட்டரை தட்டினைய்யா , பொழுதக் கழிச்சிய்யா ... அங்கபோரேன் இங்க போரன்னு உசிரை எடுக்காம படு ..”என திட்டி தீர்த்து இருப்போம் , எனவே இதுவும் என்னை அதிர்ச்சியூட்டியது. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதைஉணர்த்தியது.


 என் பாட்டியின் முகச்சாயல் அம்மாவுக்கு இருந்தது. என் பாட்டியைப்போலவே மிகவும் ருசியாக சமைத்துக் கொடுத்தார்கள்.





மேலே உள்ள பெயிண்டிங்க் அவர் செய்தது . அவரின் கைவண்ணத்தில் சாமிப்படங்கள் ஆயில் பெயிண்டிங்கில் உயிர் பெற்றிருந்தன. அதுவும் அறுபது வயதிற்கு மேல் தான் இத்தனையையும் கற்று கொண்டு , தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார் . மேலே உள்ள பெயிண்டிங்கில் உருவங்கள் நிறைய உள்ளன. கூர்ந்து கவனித்தால் அது புலப்படும். அவருடன் மாலை உணவு அருந்தினேன். அவரின் நினைவாக அவரின் ஓவியங்களில் ஒன்றை எனக்குப் பரிசளித்தார்.அவரின் அன்பில் மயங்கிய நான் அவருடன் அன்று தங்க முடியவில்லை , ஏனெனில் மறுநாள் எனக்கு பரிட்சை இருந்தது எனவே நான் அவரிடம் பிரிய மனமில்லாமல் பிரிந்தேன்.   என்னை பஸ் ஸ்டாப் வரை வந்து வழி அனுப்பிவைத்தார்.

                       அவர் என்னுடன் உரையாடும் போது எனக்கு பொங்களூர் பிடித்து இருந்தது என்பதை உணர்ந்து , இவ்வூரின் சிரமங்களை எடுத்துரைத்தார். அவரின் சந்திப்பு எனக்கு ஒரு புத்துணர்ச்சியை தந்தது. என் எழுத்து வேகத்தை குறைத்து இன்னும் பயனுள்ள செய்திகளை மட்டும் சொல்ல வேண்டும் என்பதை உணர்த்தியது. எனக்கு பெங்களூரில் ஒரு தந்தை இருக்கிறார் என்பதை நினைத்து பூரிப்படைகிறேன். புகைப்படம் டவுன்லோடு செய்ய இயலவில்லை , ஆகவே நான் இடுகை இட நாட்கள் கடந்துவிட்டன. இருப்பினும் நினைத்துப்பார்த்து எழுதும் போது உள்ள சுகம் தனிதான். அந்த சுகத்தை தந்த பால சுப்பிரமணியம் அவகளுக்கு மீண்டும் அன்புகலந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Tuesday, January 11, 2011

இலட்சிய ஆசிரியன்

நீண்ட நாட்களுக்கு பின் என் நண்பர் கல்யான் அவர்களை சந்தித்தேன். அவர் ஆசிரிய பயிற்றுநராக இருந்து தற்போது முது நிலை ஆங்கில ஆசிரியராக பணியாற்றுபவர்.   நான் பெங்களூர் ஆங்கில பயிற்சிக்கு சென்றவிபரம் அறிந்து , அங்கு கொடுத்த எதாவது ஒரு பயனுள்ள மெட்டிரியல் இருந்தால் தரவும் எனக் கேட்டார்.

     ஆசிரிய பயிற்றுநராக இருந்த சமயம் அவர் ஆசிரியர்கள் மிகவும் உழைக்கிறார்கள். ஆனால், மாணவர்கள் தான் அவர்கள் சொல்லிக் கொடுப்பதை கவனிப்பதில்லை. தனிப்படிப்பு மூலம் பணம் தந்து கற்றுக் கொண்டு , வகுப்பறையில் கவனிப்பது இல்லை என அடுக்குவார். மேலும் எந்த ஆசிரியரையாவது இப்படி இவர் செயல் படுகிறார் என்றால் கடிந்து கொள்வார் , ஒரு தலைமையாசிரியரான நீங்கள் அவர்களை திருத்த முயற்சி செய்யுங்கள் , இல்லையெனில் அவர்கள் செய்வதை கவனித்து , பின் முடிவெடுங்கள். (அதாவது ஒரு வருடம் கழித்து) . மாணவர்களை படிக்க செய்ய அனைத்து நவீன யுத்திகளையும் பயன்படுத்துவார் , என்னைப்போன்ற ஆசிரியர்களுக்கு கற்றுத்தருவார் , அதானால் ஏற்படும் நல்விளைவுகளை அவரே வந்து மதிப்பீடு செய்வார்.

      அரசு சாதனத்தை இயக்க கல்வி அதிகாரிகளுக்கு போதிய பயிற்சி இல்லை , அவர்கள் திறமை வாய்ந்தவர்கள் . ஆனால், அவர்களை அரசு ,தேவையில்லா சர்வே , தகவல் உரிமைகளை பெறுதல் மூலம் வேலைப்பளுவை அதிகமாக்கி , பள்ளிகளை பார்வையிடுதலை தவிர்க்க செய்கிறது. அதிகாரிகள் மதுரை எஸ்.எஸ்.ஏ . முதன்மைக் கல்வி அதிகாரிப்போல எதற்கும் பயப்படாமல் ஆசிரியர்களை முறைப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். அவர் ஆசிரியர்களை மனிதாபிமானத்துடன் நடத்தவும் செய்வதால் , கண்டிப்புடன் அன்பானவர் என்பார் . அவரின் கூற்றுக் கொள்ளப்படவேண்டியது.

          துவக்கப்பள்ளிகளுக்கு கொடுக்கப்படும் பயிற்சிகளை நம் ஆசிரியர்கள் முறைப்படி செயல்படுத்தினால், உயர்கல்வியில் ஆசிரியர்கள் எந்தவித கஷ்டமும் படத்தேவையில்லை.ஆனால் இன்றும் சில ஆசிரியர்கள் ஏ.பி.எல்யை எதிர்ப்பதை பார்க்கும் போது இவர்களை தார் பலைவனத்தில் வேலைபார்க்கசெய்ய வேண்டும என்பார். துவக்கப்பள்ளி மாணவர்கள் தாயைப்பிரிந்து , கால் வயிறு கஞ்சி கூட சாப்பிடாமல் வருகிறார்கள். அவர்களை ஏமாற்றுவது மிகவும் வருத்தத்துக்குரியது என்பதில் என் கருத்திற்கு உடன்பட்டவராவர்.

            தற்போது ஒரு ஆசிரியராய் அவரின் மனநிலையை அறிய ஆவல் கொண்டேன். அவரிடம் நான் கேட்ட கேள்விகள் 1. உங்களின் நவீன உத்திகள் மற்றும் சோதனைகளை செய்ய அனுமதிக்கின்றனரா....?

அனுமதிப்பதில்லை. அதையும் மீறி பயன்படுத்தினால், என்னை ஒரு மனநலம் குன்றியவனைப்போல பார்க்கின்றனர். இருப்பினும் என் நிலையில் இருந்து மாறுவதாய் இல்லை .

2. ஆசிரியராய் இருப்பது என்பது ஆசிரியப்பயிற்றுநராக இருப்பதைவிட கடினமா?

அப்படியில்லை... ஆனால் ஆசிரியப்பயிற்றுநராக இருந்த போது , ஒரு சுதந்திரம் இருந்தது. உங்களைப்போன்ற ஆசிரியர்களிடம் நவீன யுத்திகளை பரிசோதிக்க சொல்லி , அதனை மதிப்பீடு செய்து , அதனை எல்லாப் பள்ளிகளுக்கும் நடைமுறைப்படுத்தசெய்வது எளிதாக இருந்தது. ஆனால்,உயர் கல்வி பொறுத்தவரை மதிபெண் அடிப்படையில் இயங்குவதால், தலைமை ஆசிரியர்களும் நூறு சதவீத தேர்ச்சியை மனதில் கொண்டு இயங்குவதால், புரிந்து , உணர்வுப்புர்வமாக , மனதில் தங்கும்விதமாக கல்வி போதனை அமையாமல், மனப்பாடம் சார்ந்த ஒரு முறையை மட்டுமே கணக்கில் கொண்டு செயல் படுகிறது.

3. ஆப்பிரேசன் சக்சஸ் பேசண்டு டைடு என்ற ரீதியிலான கல்வி மட்டுமே , நவீன கொலை , கொள்ளைகளுக்கு காரணமாக அமைகிறது என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா.? தற்போதாவது என்னைப்போன்ற ஆசிரியர்களுக்கு , தலைமை ஆசிரியர்களுக்கு சக ஆசிரியர்களால் தொல்லையும் தொந்தரவும் உண்டு என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா....? அவர்களை இப்போ து என்ன செய்யலாம்..?

    நிச்சயமாக , ஆனால், எல்லா ஆசிரியர்களையும் குறைசொல்ல முடியாது. மற்றும் அது போன்ற ஆசிரியர்களை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது ,அது நம் கொள்கையை மாற்றிவிடும். லெட் தம் டு ரியலைஸ். நாம மாத்திக்காட்டுவதில் இருந்து பின்வாங்கக் கூடாது. நீங்கள் இதுவரை அவர்களைப்பற்றி கவலைப்பட்டுள்ளீர்கள் , ஆனால் அவர்களுக்காக உங்கள் பணியினைச் செய்யத் தவறியது உண்டா....? அப்படித்தான் நானும் பின்வாங்கமாட்டேன். என்னை லூசு என்பவனை இவ்வளவு நாளாய் ஊரை ஏமாற்றியுள்ள விவரத்தை உணர்த்துவேன். என்னைப்போல இரண்டு ஆசிரியர்களையாவது இந்த வருடத்தில் உருவாக்குவேன்.

  மாணவர்கள் பற்றி உங்கள் கருத்து....

   அவனை முட்டாள் ஆக்குவது ஆசிரியர்கள் தான் , மதிப்பெண் மட்டுமே சாதனைக்கு வழி என எண்ணி , அவனை ஒரு மனப்பாடம் செய்யும் இயந்திரமாக ஆக்கி உள்ளார்கள். இஸ் என்பதைக்கூட வாசிக்க தெரியாதவன் நாலு பக்கம் கட்டுரையை அழகாக பிழையில்லாமல் எழுதுகிறான். அவனின் அறிவை முறைப்படுத்தினால் , அவன் மிகவும் திறமை வாய்ந்த அப்துல்கலாம் போன்ற விஞ்ஞானியாவன். பாவம் தொள்ளாயிரம் மதிப்பெண் மட்டும் எடுத்து அவனின் சிந்திக்கும் அறிவை வீணாக்குகிறோம். ஆசிரியர்கள் மட்டுமே மணவனின் எதிர்காலத்தை இறுக்கமானதாக மாற்றுகின்றனர். தனிப்படிப்புக்கு அழைத்து கொடுக்கின்றன்ர். நவீன யுத்திகளை பயன்படுத்து நாம் கற்றுதருவதை மாணவர்கள் ஆர்வமுடன் கவனிக்கின்றனர். அவர்களின் படைப்பாற்றல் மிகவும் சக்திவாய்ந்ததாக உள்ளது. ஆனால் அவர்கள் நம்மிடம் வந்து இப்படியெல்லாம் எனக்கு பாடம் நடத்தினால், நாங்க முதல் குரூப் எடுத்து இருப்போம் என்கின்றனர். பாவம் ....


     அவரை பிளாக் எழுத அழைத்துள்ளேன் . விரைவில் பொங்கல் முதல் அவர் எழுத துவங்குவார். அவரின் உரையாடல் இப்படியே தொடர்ந்தது. ஆசிரியர்கள் மனம் மாறினால் , மாணவனின் மனம் மாளிகையாக மாறி , சமுகத்திற்கு பயனுள்ள ஒழுக்கமான எதிர்காலம் கிடைக்கும் என நம்புவோம்.

Saturday, January 8, 2011

கவர்னர் உரையில் கல்வி

  தமிழக சட்டப்பேரவையின் கவர்னர் உரையில் இருபத்து நான்காவது குறிப்பில் நம் கல்வி முறையின் சாதனைகளை பற்றி தெரிவித்து இருப்பது தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பணிக்குக் கிடைத்த பாராட்டாகும். அப்துல் கலாம் சொல்வது போல நம் தொடக்கப்பள்ளி ஆச்சிரியர்கள் தான் வளமான பாரதத்திற்கு ஆதாரம். ஒவ்வொரு மனிதனின் வெற்றி அவன் சந்திக்கும் ஆசிரியரின் துண்டுதலின் பேரில் நடந்து இருக்கும்.  என் வாழ்வு மதுரை தூய மரியன்னை பள்ளியில் முடிவு செய்யப்பட்டது.   கல்லூரி நாட்களில் அமெரிக்கன் கல்லூரியின் விலங்கியல் துறையின் சைலஸ் மற்றும் நம் தருமி என்னை மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள்.  தமிழின் மீது பற்றும் , தமிழில் கதை எழுத தூண்டியவர்கள் தமிழ் துறையின் பிரபாகர் மற்றும் சுந்தர் ஆவார்கள். சுந்தர் அவர்களின் நாடகப்பட்டறையில் இருந்து வந்தவன் என்பதால் இன்றும் என்னால் இயல்பாக நடிக்க முடியும் . எந்த கருப்பொருளையும் நாடக வடிவிற்கு  கொண்டு வர முடியும்.

    கல்லூரி வாழ்விலும் , பள்ளி வாழ்விலும் என் ஆசிரியர்கள் என்னுடன் ஒரு நண்பனைப் போல ஒரு உணர்வை ஏற்படுத்தியதால் இன்று இளம் வயதில் ஒரு நல்ல நிலையை கொண்டுள்ள  தலைமைப் பண்பை பெற்று உள்ளேன் . எனக்கு சகிப்புத் தன்மை ஏற்படுத்திய என் பள்ளி நாட்களை மறக்க முடியாது.

       பிளாக்கர் உலகில் சீனா அய்யா போன்ற  அன்பு உள்ளங்களை அடைந்துள்ளேன்.,அவரின் உயர்ந்த பதவியை மறந்த எளிமை, அடக்கம் , அனைவருடனும் ஒரு சகோதரனை போன்று உணர்வுடன் பழகும் தன்மை, வேலைப்பளுவிலும் இயல்பு தன்மை மாறாமல் சிரித்து பேசும் இயல்பு , என்னை ஒரு புதிய உலகிற்கு அழைத்து , என் ஆசிரியர்களுடன்   ஏற்படும் அணுகுமுறையினை மாற்றி , ஒரு நல்ல பள்ளிக்கான சுழலை மேலும் மேம்படுத்த கற்றுத் தந்தது.

   கவர்னர் உரையில் உள்ளது ....
2008 -2009 ல் தேசிய கல்வி திட்டமிடுதல் மற்றும் நிவாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பள்ளிக் கல்வியில் தரத்தைக் குறிப்பிடும் தரக் குறியீட்டில் தமிழகம் இந்தியா அளவில் ஐந்தாம் இடத்தில் உள்ளது. 


     இது துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கிடைத்த ஒரு பாராட்டு ஆகும். தமிழகத்தின் வருங்காலம் நல்லப் பாதையில் செல்கிறது என்பதற்கு இது ஒரு தொடக்கம்
 

         தொடக்கக் கல்வியில் இடைநிற்றல் 2004 -  2005 ல் 3.81 சதவிதமாக இருந்தது ,கடந்த ஆண்டில் ஒரு சதவீதமாக குறைந்துள்ளது. அதேப்போல    2004 -  2005 ல் இடைநிலைக் கல்வியில் இடை நிற்றல் 7.59 சதவீதமாக இருந்தது இந்த ஆண்டில் 1.79 ஆக குறைந்துள்ளது .

    இது பள்ளிகளில் போதனை முறை மாணவர்களை மையம் கொண்டதாக மாறியதன் விளைவாகும் . செயல் வழிக் கற்றல் மாணவர்களை பள்ளியை விட்டு ஓடுவதை தவிர்த்து , பள்ளியினை தேடி வரச் செய்துள்ளது என்பதற்கான சான்றாகும். ஆசிரியைகளும் தம் போதனை முறையை மாற்றி சாதனை முறையை நோக்கி தமிழக கல்வி துறையை அழைத்துச் செல்வதற்கான மைல் கல்லாகும். 


    தேசிய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 2008 ஆய்வின் படி ,கணிதம்,
மொழித்திறன் படங்களில் மாணவர்களின் திறன் தமிழ் நாட்டில் தான் முதல் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
  
    இது நம் முதன்மை கல்வி அதிகாரிகள் , மாவட்டக் கல்வி அதிகாரிகள், உதவி தொடக்க கல்வி அதிகாரிகள், மாவட்டத் திட்ட இயக்குனர்கள், மேற்பார்வையாளர்கள், ஆசிரிய பயிற்றுனர், பள்ளி ஆசிரியர்களின் கடின கூட்டு உழைப்பிற்கு கிடைத்த பரிசாகும்.   


       இத்தனை சாதனைகளையும் தம் கவர்னை உரையில் வெளிப்படுத்தியுள்ள  அரசு ஆசிரியர்களின் சம்பள விஷயமான மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தினை கொடுக்க மறுப்பதேன் ?  அதுவும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மிகவும் குறைந்த நிலையில் அதிக வித்தியாசத்தில் ஊதியம் நிர்ணயித்துள்ளது மாற்றப்படுமா..? நீங்கள் கொடுத்துள்ள குறைந்த ஊதிய உயர்வை மகிழ்ச்சியாக ஏற்று நன்றி தெரிவித்து இருந்தாலும் , அது அரசை இன்னும் ஆசிரியர்கள் மனப் பக்குவத்தை உணர்ந்து , மத்திய அரசுக்கு இணையான ஊதியம் ஏற்படுத்த ஒரு துண்டுகோள் என்பதை உணர்ந்து விரைவில் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் என்று நம்புவோம்.

   செயல் வழிக் கல்வி மாணவர்களிடம் தன்னம்பிக்கையையும் , கற்கும் திறனையும் அதிகரித்துள்ளது என்பதை அரசு தன் கவர்னர் உரையில் வெளிப்படுத்தி , தமிழக ஆசிரியர்களின் செயலுக்கு ஒரு அங்கீகாரத்தினைத்   தந்துள்ளது.

Friday, January 7, 2011

சிம் டு சிம் ...

ஒவ்வொரு விடியலும்
புதிய ஊழலின் பிறப்பிடமாய்
அதுவும்
தமிழ்நாடு சிறப்பிடமாய்...!


இந்தியாவின் எந்தக் கோடியிலும்
தெரிந்து வைத்திருக்கிறான்
கோடி ஊழலையும் ....
கேடிகளில் அரசியலையும்..
ஒரு சாமானியன்..!

ஊழலுக்கும் வர்ணமிடும் ஒரே
இந்தியன் தமிழனய்யா...
என்னடா இது
காச அள்ளி வீசுறான்னேன்னு
பார்த்தேன்....
நம்ம காச வாங்கி இவனுக்கு
எதுக்கு ஓட்டுப்போடணும்
இப்ப புலம்புறான்
இவனும் தமிழன்னய்யா...!

எது நடந்தாலும்
காந்தி அப்படியே
சிரிக்கிறார் கரன்சியில்...
காந்தியம் செத்தது தெரியாமல்...!

புகைவண்டி சென்றபின் தான்
தெரியும்
சட்டையில் படிந்த கரி...
ஆனால்
ஒவ்வொரு தடவையும்
தேர்தல் ரயில் செல்லும் போதும்
சட்டைக்கரை தெரியாமலே போகிறது..!

ஆச்சரியம் ஒன்றுமில்லை
இடது பெருவிரல் மை
படும் முன்னே
வலது கை கரையாகிறது
அரசியல் வாதியின் கரன்சியில்...!


எது எப்படியோ போகிறது
இலவச கால் அரைமணி நேரமாம்
சிம் டூ சிம் டாக் டைம் பிரியாம்
என போசியே மறக்கிறான்
எல்லாவற்றையும்...!

Wednesday, January 5, 2011

ஆர். ஐ.இ.யில் முப்பது நாட்கள்

  வணக்கம் . மதுரை வந்துவிட்டேன். இருப்பினும் ஆர். ஐ. இ. (Regional Institute of English for South India)யில் வாழ்ந்த அந்த முப்பது நாட்கள் மிகவும் இனிமையானது. எல்லா மாநில ஆசிரியர்களும் வேறுபாடின்றி மிகவும் அன்பாக சககோதரத்துவத்துடன் பழகிய நாட்கள் மறக்க முடியாது. என்னுடன் வந்த குமார் மிகவும் அருமையாக பழகினான். மொத்தம் எழுபத்து இரண்டு ஆசிரியர்கள். அனைவரையும் பெயர் சொல்லி அழைத்தே , பழகினோம். இது ஆங்கில பழக்கமோ என்னவோ , அங்கு இருக்கும் போது தானாகவே வந்தது. ஐம்பத்து ஐந்து வயது ரவிச்சந்திரனையும் நான் அப்படித்தான் அழைத்தேன். அவரும் மகிழ்ச்சியுடன் சரவணா என்பார்.

    என் எதிரே இருந்த ஜோசப் (ஐம்பதை தாண்டும்)ஒரு காது கேளாதவர்களுக்கான பள்ளியை நடத்தினாலும் , எந்த வித கொளரவமும் பார்க்காமல், வயது வித்தியாசம் பாராமல் எளிமையாக எங்களுடன் தொடர்பில் இருந்தார்.

    இளமை ஊஞ்சல் ஆடியது . அனைவரும் வயது வித்தியாசம் இன்றி காலை எழுந்து குளிக்க , படிக்க, மாலை நடக்க , பின்பு ஆங்கிலம் பற்றிய உரையாடல் என மணிக்கணக்கில் தன்னை மறந்த நிலையில் படித்தோம். தேர்வும் எழுதினோம். மாணவனைப்போல பரிட்சை ரிசல்டுக்காக காத்திருக்கிறோம்.


    திண்டுக்கல் ரோசா தவமணி , வெங்கடேசன், தருமபுரி நக்கிரன், சென்னை ஃபெளிக்‌ஸ், தூத்துக்குடி நிர்மல், ஆறுமுகம், சவரிகணேஷ், பிலால், திருநெல்வேலி பிரதாப் சிங், மகேந்திரன், அருண், ஜிஜி, ஜோ, செல்வின்,தஞ்சாவூர் இன்பம், சேலத்து விவேகானந்து, தேவன் அவர்களுடன் தோழி சித்ரா, லெட்சுமி, தனம்,சகிலா,  செல்வராணி, செலின்ராணி, சிஸ்டர் தவமணி, திலகா,காமாட்சி, கொளசல்யா,சகிலா, சித்தப்பா ஜெயசீலன், சகலை அருண் என இவர்களுடன் ரகளையுடன் பொழுது மகிழ்ச்சியுடன் களிந்தது.இளைய கவி மாரி செல்வம் கவிபாட வந்துவிடுவாரோ என அத்தனை அக்காமார்களும் மாறிச் செல்வது தினமும் ரகளை, ரசிக்க வைத்தது.

    கர்நாடக நண்பர்கள் சந்திர சேகர்,அன்னப்ப ராவ்( பன்னிரெண்டு மொழிகள் அறிந்தவர்) , பக்ரேஸ், பக்கிரி , கோபாலன்,  பரசுராம், என அத்தனைப் போரும மிகவும் மனம் கவர்ந்தவர்கள்.


     கல்லூரி நாட்கள் என் வயோதிகத்திலும் வரும் என்பதை நான் நினைத்துப்பார்க்க வில்லை. நல்ல அனுபவம். வயது முதிர்ச்சி எங்களை பக்குவப்படுத்தியது. எங்கள் இருப்பிடம் மெயின் ரோட்டில் இருந்து (டீ குடிக்க, சோப்பு வாங்க) வெகு தொலைவில் இருந்ததால் , தினமும் மூன்று கிலோ மீட்டர் வாக்கிங் சாத்தியமானது. மாலையில் பாண்டிச்சேரி ஆசிரியர்களுடன் கிரிக்கெட் விளையாட்டு எங்களை மேலும் இளமையாக்கியது.


     அனைத்து பேராசிரியர்களும் ஆங்கிலத்தை முழுமையாக பேச, உச்சரிக்க, எழுத , படிக்க கற்றுத்தந்ததுடன் , நாங்கள் கற்ற அதே ஆங்கிலத்தை வகுப்பறையில் மாணவர்களுக்கு எப்படி கற்றுத்தருவது என்பதை கற்றுத்தந்த விதம் மிகவும் எளிமை, அருமை. நம் குழந்தைகள் இவ்வளவு நாட்கள் ஆங்கிலம் என தங்கிலீசைப் படித்து இருப்பதை குறித்து வருத்தமடையச் செய்தது.  பேராசிரியர்கள் வெங்கடேஸ்வரன், ஹித்தேஸ், சிரிதர்,பத்மாவதி,பூஜா கிரி,எளிமையாக தமக்குரிய கவர்ச்சியில் ஆங்கிலத்தைக் கற்றுத்தந்தனர்.

     ஆங்கில வகுப்புகளில் ஒரு ஆசிரியர் அந்த நாற்பது நிமிடத்தை முழுமையாக ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தி நடத்துவாரானால், அவனுக்கு தானாக ஆங்கிலம் வந்துவிடும். ஆம், ஆரம்பத்தில் எங்களிடம் ஆங்கிலம் பேச பயந்த ஆசிரியர்கள் , பத்தாவது நாளில் ஆங்கிலத்தில் பொளந்து கட்டினர்.   இதே சுழல் வகுப்பறையில் ஏற்படுத்தினால், மாணவன் பயம் மறந்து , தானாக ஆங்கிலம் பேசுவான். தயவுசெய்து ஆங்கில வகுப்பை ஆங்கிலம் மட்டும் உபயோகித்து நடத்துவோமானால் , நம் மாணவர்கள் கார்பரேட் உலகில் வெல்லுவார்கள்.

        கர்நாடக ஆசிரியர்கள் அவர்களின் தாய் மொழியை அதிகமாக பயன்படுத்த வில்லை. அவர்கள் தங்களின் ஆங்கில அறிவை வளர்க்க , எந்நேரமும் ஆங்கிலத்திலே பேசினர். நம் தமிழ் மொழியில் இரவு ஆறு மணிக்கு மேல் சரளமாக அறையில் பேச கொண்டிருந்தாலும் , அவர்கள் அங்கும் ஆங்கிலமே பயன்படுத்தினர்.

      பெங்களுர் மார்க்கெட் காய்கறி விற்பவன், பேப்பர் காரன், பால் காரன், சமயல் காரன் என அனைவரும் சரியான உச்சரிப்பில், பிழையின்றி ஆங்கிலத்தைப் பொளந்து கட்டினர். இது ஒருவனின் சூழல் தான் அவனின் மொழியினை செம்மைப்படுத்தும் என்பதை உணர்த்தியது. ஆகவே, தயவு செய்து நம் பள்ளிகளில் இனி ஆங்கில வகுப்புகளில் ஆங்கிலம் மட்டுமே எளிய நடையில் பயன்படுத்துவோம்.